பிரித்தானியாவில் யாருக்கும் தஞ்சம் வழங்க மாட்டோம் – Reform UK கட்சி அறிவிப்பு
அடுத்த பொதுத் தேர்தலில் தனது கட்சி வெற்றி பெற்றால், ஐந்து ஆண்டுகள் வரை யாருக்கும் தஞ்சம் (asylum) வழங்கப்படாது என்று ‘ரீஃபார்ம் யுகே’ (Reform UK) கட்சியின் தலைவர் நைஜல் ஃபாராஜ் Nigel Farage அறிவித்துள்ளார்.
நிலுவையில் உள்ள சுமார் 90,000 தஞ்சம் கோரும் விண்ணப்பங்கள் செல்லாததாக்கப்படும் என்றும், புதிய விண்ணப்பங்கள் தானாகவே நிராகரிக்கப்படும் என்றும், தகுதி பெறாத விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கோ அல்லது பாதுகாப்பான மூன்றாம் நாட்டிற்கோ திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் வாக்குறுதியளித்துள்ளார்.
இங்கிலாந்தின் தெற்குக் கடற்கரைப் பகுதியில் இன்று பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், தஞ்சம் கோரியவர்களைத் திரும்பப் பெற மறுக்கும் நாடுகள் மீது வரிகள், விசா தடைகள் அல்லது வான்வெளிப் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் மீண்டும் ஒரு சாதாரண நாடாக மாற விரும்புகிறோம்; அதாவது, உலகின் மற்ற எல்லா நாடுகளையும் போலவே, சட்டவிரோதமாக வருபவர்களைத் தடுத்து வைத்து நாடு கடத்தும் நாடாக இருக்க விரும்புகிறோம்,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அடுத்த பொதுத் தேர்தல் 2029-இல் நடைபெறவுள்ளது. கருத்துக்கணிப்புகளின்படி, பிரித்தானிய வாக்காளர்களின் முக்கியப் பிரச்சினையாகக் புகலிட கோரிக்கையாளர்கள் காணப்படுகின்றனர்.
படகுகள் மூலம் வரும் ஆயிரக்கணக்கான தஞ்சம் கோருபவர்களைத் தடுப்பதில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட அதிருப்தியே இதற்குக் முக்கியக் காரணமாகும்.





