வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: கொரிய தீபகற்பத்தில் பதற்றம்
வடகொரியா தனது கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடலை நோக்கிப் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிச் சோதனை நடத்தியுள்ளதாகத் தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
தலைநகர் பியோங்யாங் பகுதியிலிருந்து திங்கள்கிழமை ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்று 900 கிலோமீட்டருக்கும் (559 மைல்கள்) அதிகமான தூரம் பயணித்ததாகத் தென்கொரியாவின் கூட்டுப்படை தளபதிகள் பிரிவு (JCS) தெரிவித்துள்ளது. இருப்பினும், எத்தனை ஏவுகணைகள் கண்டறியப்பட்டன என்ற துல்லியமான விவரங்களை ராணுவம் வெளியிடவில்லை.
17 நிமிட இடைவெளியில் குறைந்தபட்சம் இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டு, ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு (EEZ) வெளியேயுள்ள கடல் பகுதியில் விழுந்ததாக ஜப்பானின் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் தகாஷி கோயாரி தெரிவித்துள்ளார்.
முதல் ஏவுகணை சுமார் 220 கிலோமீட்டர் தூரமும், இரண்டாவது ஏவுகணை “சீராக இல்லாத” (irregular) பாதையில் பயணித்து 910 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரமும் பாய்ந்ததாகத் தெரிவித்த கோயாரி, அது ஒரு ‘ஹைப்பர்சோனிக்’ (ஒலியை விடப் பல மடங்கு வேகத்தில் செல்லும்) ஆயுதமாக இருக்கலாம் என்றும் கணித்துள்ளார்.
வடகொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணை சோதனைகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களை மீறுவதாகவும், இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் தென்கொரிய அதிபர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
இரு நாடுகளும் தொடர்ந்து ஆயுதச் சோதனைகளை நடத்தி வருவதால், திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஏவுகணை சோதனைகள் கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன.
தென்கொரியா தனது சொந்த ஹைப்பர்சோனிக் ஆயுதத்தைச் சோதனை செய்த சில நாட்களிலேயே வடகொரியா இந்தச் சோதனையை நடத்தியுள்ளது, தனது பலத்தைக் காட்டுவதற்காகவே இருக்கலாம் எனத் தென்கொரிய கூட்டுப்படை செய்தித் தொடர்பாளர் ஜாங் தோ-யங் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமையன்று, தென்கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் நாட்டின் முதலாவது ஹைப்பர்சோனிக் ஏவுகணைச் சோதனையை நேரில் பார்வையிட்டார். தென்கொரிய ஜனாதிபதி ஒருவர் ஏவுகணைச் சோதனையைப் பகிரங்கமாக நேரில் பார்வையிட்டது அரிதான ஒரு நிகழ்வாகும்.
இந்த ஹைப்பர்சோனிக் ஆயுதம் முழுமையாக உருவாக்கப் பட்டதும், கொரிய தீபகற்பப் போர்க்களத்தில் உள்ள முக்கிய இலக்குகளைத் திடீரெனத் தாக்கும் தென்கொரியாவின் திறனை அதிகரிக்கும் என்று லீயின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, அக்டோபர் 3 ஆம் திகதி, தென்கொரியா மற்றும் ஜப்பானின் ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளிடமிருந்து தப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஹைப்பர்சோனிக் இடைநிலை ஏவுகணையை வடகொரியாவும் சோதனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.





