பாலஸ்தீனத்தில் தேர்தலை நடத்துமாறு பிரித்தானியா உட்பட 8 நாடுகள் கூட்டாக வலியுறுத்து
பாலஸ்தீன அதிகார சபை 2027ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள் நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களை நடத்த வேண்டும் என ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட எட்டு நாடுகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, பிரான்ஸ், லக்சம்பேர்க், நோர்வே, போலந்து மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இணைந்து இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
பாலஸ்தீனத்தில் ஜனநாயக மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கும், இரு நாடுகள் தீர்வைப் பாதுகாப்பதற்கும் தேர்தல்கள் அவசியமானவை என அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
தேர்தல்கள் ஒத்திவைப்பு
பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், கடந்த ஒக்டோபர் மாதம் நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைப்பதாக அறிவித்திருந்தார்.
இதன்படி, கடந்த நவம்பர் 28ஆம் திகதி நடைபெறவிருந்த நாடாளுமன்றத் தேர்தல் 2027 செப்டெம்பர் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜனாதிபதித் தேர்தலும் அதே தினத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
காஸா பகுதியில் நிலவும் பாதுகாப்புச் சூழல் மற்றும் இஸ்ரேலின் கட்டுப்பாடுகள் காரணமாக தேர்தலை நடத்துவதற்கான சூழல் இல்லை என பாலஸ்தீன விடுதலை அமைப்பின் நிர்வாகக் குழு தெரிவித்திருந்தது.
பாலஸ்தீனத்தில் இறுதியாக 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலும், 2006ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற்றன.
இதற்குப் பின்னர் இருபது ஆண்டுகளாக தேசிய அளவிலான தேர்தல்கள் நடைபெறவில்லை.
இந்நிலையில், பாலஸ்தீன மக்களின் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்துவதற்காக சுதந்திரமானதும் வெளிப்படையானதுமான தேர்தல்களை நடத்துவது அவசியம் என எட்டு நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.
மேலும், பாலஸ்தீன அதிகார சபைக்குத் தொடர்ந்தும் வழங்கப்படும் ஆதரவும், அதன் நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பும் சீர்திருத்தங்கள் மற்றும் ஜனநாயக மறுமலர்ச்சி தொடர்பான உறுதிமொழிகளை நிறைவேற்றுவதுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் அந்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன




