நைஜீரியாவில் வணிகர்களை குறிவைத்து தாக்குதல் – 20 பேர் படுகொலை
நைஜீரியாவின் வடமேற்கு ஜம்ஃபாரா மாநிலத்தில், இராணுவப் பாதுகாப்புடன் சந்தைக்குச் சென்று கொண்டிருந்த வணிகர்களின் வாகனங்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை மதியம் சுமார் 2 மணியளவில், குவாஷியிலிருந்து Gwashi புக்குயும் Bukkuyum மாவட்டத்தில் உள்ள நசராவா Nasarawa சந்தைக்கு வாகனங்கள் சென்றுக்கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் 20 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக இராணுவ வட்டாரம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
கொல்லப்பட்டவர்களில் நான்கு இராணுவ வீரர்கள், மூன்று காவலர்கள் மற்றும் ஒரு நைஜீரிய குடிமைப் பாதுகாப்புப் படை அதிகாரி ஆகியோரும், 12 பொதுமக்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு நைஜீரியாவில், கொள்ளையர்கள் என்று அழைக்கப்படும் கனரக ஆயுதம் ஏந்திய கும்பல்களின் தாக்குதல்கள் சமீபகாலங்களில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




