தேர்தல் பிரச்சார உரையாக மாறவுள்ள நெதன்யாகுவின் ஐ.நா.உரை
இஸ்ரேலில் நடைபெறவுள்ள தேர்தலில் தோல்வியடையும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நியூயோர்க் மேயர் சோஹ்ரான் மம்தானியைச் (Zohran Mamdani) சாடும் வகையில் தனது ஐ.நா உரையைப் பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சம்பவம் சர்வதேச அளவில் இஸ்ரேலியத் தலைவருக்கு அதிகரித்து வரும் தனிமைப்படுத்தலையே வெளிப்படுத்துகிறது.
இந்த வாரம் வெளியிட்ட வீடியோ அறிக்கையில் மேயர் மம்தானியை நேரடியாகக் குறிப்பிட்ட நெதன்யாகு, “எங்கள் வீரர்களின் வீரத்தைப் பற்றிய உண்மையையும், உங்களைப் பற்றிய உண்மையையும் கூறவே” நான் நியூயோர்க் செல்கிறேன் என்று தெரிவித்தார்.
மேலும், மம்தானி ஹமாஸ் போராளிகளுக்கு ஆதரவளிப்பதாக உண்மைக்குப்புறம்பான குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்காவின் மிகப்பெரிய நகரமான நியூயோர்க்கிற்கு நெதன்யாகு விஜயம் செய்தால், போர்க்குற்றக் குற்றச்சாட்டுகளுக்காக அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து மம்தானி பிரச்சாரம் செய்தார்.
எனினும், அதற்குத் தனக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை எனப் பின்னர் அவர் தெளிவுபடுத்தினார்.
இருப்பினும், இந்த வாரம் நெதன்யாகுவை “பாலஸ்தீனியர்களுக்கு எதிரான கொடூரமான இனப்படுகொலையின் சூத்திரதாரி” என மம்தானி விமர்சித்துள்ளார்.
போர்க் குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் நெதன்யாகு, கடந்த ஜனவரி மாதம் மம்தானி நியூயோர்க் மேயராகப் பொறுப்பேற்ற பிறகு அந்நகரத்திற்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும்.
இதனிடையே, நெதன்யாகுவின் வலதுசாரி அரசாங்கத்திற்கு எதிரான இஸ்ரேலியர்கள் சிலர் நியூயோர்க்கில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
‘தேர்தல் பிரச்சார உரை’ போலமையவுள்ள ஐ.நா உரை:
இன்னும் ஐந்து வாரங்களில் இஸ்ரேலில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கருத்துக்கணிப்புகள் நெதன்யாகுவின் நீண்டகால ஆட்சிக்காலம் முடிவுக்கு வரக்கூடும் என்பதையே காட்டுகின்றன.
காஸா போர் மீதான சர்வதேச விமரிசனங்கள் அதிகரித்து வரும் சூழலிலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான சந்திப்பு எதுவும் திட்டமிடப்படாத நிலையிலுமே நெதன்யாகுவின் இந்தப் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.
“அவர் உண்மையில் ஐ.நா சபையிடம் பேசவில்லை, இஸ்ரேலிய பொதுமக்களிடமே பேசுகிறார்” என்று தெரிவித்துள்ள வோஷிங்டனுக்கான இஸ்ரேலின் முன்னாள் தூதர் மைக்கேல் ஓரென், நெதன்யாகுவின் ஐ.நா உரை ஒரு “தேர்தல் பிரச்சார உரை” போல அமையும் என எதிர்பார்க்கிறார்.
ட்ரம்பைச் சந்திக்க வாய்ப்பில்லை
ஐ.நா உரைகளுக்காக அமெரிக்காவிற்கு நெதன்யாகு மேற்கொண்டுள்ள இந்த விஜயம் வழக்கத்திற்கு மாறாக மிகவும் குறுகியதாக அமைந்துள்ளது. நியூயோர்க்கிற்கு வருகை தந்துள்ள அவர், மாலையில் உரையாற்றிய உடனேயே அன்றைய தினமே நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.




