காஸா இனப்படுகொலையில் பிரித்தானியாவின் பங்கு என்ன? விசாரணை கோரும் மனுவுக்கு 91,000 பேர் ஆதரவு
இஸ்ரேல் காஸா மீது முன்னெடுத்துவரும் இனப்படுகொலைப் போரில் பிரித்தானியாவின் பங்களிப்பு குறித்து பொதுவிசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், இதுவரை 91,000-க்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த மனு நாடாளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு மேலும் 10,000 கையெழுத்துகள் தேவைப்படுகின்றன.
Your Party கட்சியின் தலைவி ஜெனிபர் போர்ப்ஸ், ஒக்டோபர் 23ஆம் திகதி இந்த மனுவைத் தொடங்கினார்.
இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குதல், கண்காணிப்பு விமானங்களைப் பயன்படுத்துதல் மற்றும் பிரித்தானியாவின் ரோயல் விமானப்படைத் தளங்களைப் பயன்படுத்த அனுமதித்தல் உள்ளிட்ட விவகாரங்களில் பிரித்தானியாவின் பங்களிப்பு குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
மேலும், இந்த விசாரணையின் மூலம் அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளிடம் அவர்களின் தீர்மானங்கள் தொடர்பாகக் கேள்வி எழுப்பவும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, இவ்விடயம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரமி கோர்பின் விடுத்த கோரிக்கையை அந்நாட்டு அரசாங்கம் நிராகரித்திருந்தது.
ஒக்டோபர் 19ஆம் திகதி வெளியிட்ட பதிலில், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ஸ்டீபன் டௌட்டி, ஏற்கனவே நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்படும் கண்காணிப்பு நடவடிக்கைகள் போதுமானவை என்பதால் தனியான விசாரணை அவசியமில்லை எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரித்தானியாவின் ஆயுத விற்பனை, ரோயல் விமானப்படைத் தளங்களின் பயன்பாடு, கண்காணிப்பு விமானப் பயணங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பான சட்ட ஆலோசனைகள் உள்ளிட்ட விடயங்களில் பிரித்தானியாவின் பங்கு குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட வேண்டும் என ஜெரமி கோர்பின் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கம் மறைப்பதற்கு எதுவுமில்லை என்றால், பொறுப்புக்கூறலில் இருந்து ஏன் விலகிச் செல்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.




