ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் புதிய திருப்பம்: ஹோட்டல் பதிவுகளை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு
இலங்கையின் முன்னாள் அரச புலனாய்வு சேவை தலைவர் சுரேஷ் சாலே மற்றும் ஆசாத் மௌலானா ஆகியோருக்கான அறை முன்பதிவுகள் மற்றும் கட்டணங்கள் தொடர்பான ஆவணங்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம், அஹுங்கல்லவில் உள்ள ஒரு விடுதி நிர்வாகத்திற்கு,உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சமர்ப்பித்த மேலதிக அறிக்கையில் விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கோட்டை நீதிவான் பசன் அமரசேகர, குறித்த விடுதி நிர்வாகம் இந்த ஆவணங்களை வழங்க வேண்டும் என்று நேற்றுமுன்தினம் உத்தரவிட்டார்.
தற்போது வெளிநாட்டில் வசிக்கும், ‘பிள்ளையானின் முன்னாள் செயலாளரான ஆசாத் மௌலானா, 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 15 மற்றும் 16 ஆகியதிகதிகளில் அஹுங்கல்லவில் உள்ள ‘ரியூ’ (Riu) விடுதியில் சுரேஷ் சாலேயைச் சந்தித்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் வாக்குமூலம் அளித்திருந்தார்.
இத்தகைய சந்திப்பு இடம்பெற்றதை சுரேஷ் சாலே மறுத்த போதிலும், குறித்த நாள்களில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றதை ஏனைய ஆதாரங்கள் மூலம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
தகவல்களை மேலும் சரிபார்க்கவும், விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவும் இந்த விடுதி ஆவணங்கள் தேவைப்படுவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
அதேவேளை, ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களில் சுரேஷ் சாலே உட்பட மூவர் ஈடுபட்டிருக்கலாம் அல்லது அவர்களுக்கு அது குறித்து முன்கூட்டியே தெரிந்திருக்கலாம் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கடந்த 4 ஆம் திகதி நீதிமன்றத்தில் குறிப்பிட்டது.
சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன, பிரதி காவல்துறை மா அதிபர்கள் பிரசாத் ரணசிங்க மற்றும் நிஷாந்த சொய்சா ஆகியோர் வழங்கிய வாக்குமூலங்கள் மூலம், மிகவும் சிக்கலான மற்றும் சர்ச்சைக்குரிய பல விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அந்தத் திணைக்களம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.




