ஜிபூட்டியிலிருந்து ஏமனுக்குச் சென்றுகொண்டிருந்த படகு விபத்து – 109 பேர் பலி
ஜிபூட்டியிலிருந்து ஏமனுக்குச் சென்றுகொண்டிருந்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்பட குறைந்தது 109 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் 116-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
IOM வெளியிட்ட அறிக்கையின்படி, ஜிபூட்டியின் துறைமுக நகரமான ஓபோக்கிற்கு (Obock) வடக்கே உள்ள குஹெரே (Guhere) பகுதிக்கு அருகில் கடந்த 08 அல்லது 09 ஆம் திகதி இந்த விபத்து நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான படகில் பயணம் செய்தவர்களில் 80-க்கும் மேற்பட்டோர் உயிர் பிழைத்துள்ளனர். அவர்கள் அனைவரும் எத்தியோப்பிய நாட்டவர்கள் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜிபூட்டி அதிகாரிகள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக IOM தெரிவித்துள்ளது.





