இங்கிலாந்து பொருளாதாரம் தேக்கமடையும் சாத்தியம்
தொழில்துறைகள் அழுத்தத்தில் இருப்பதாலும், புவிசார் அரசியல் பதட்டங்கள் வளர்ச்சியைத் தடுப்பதாலும், இங்கிலாந்து பொருளாதாரம் மேலும் ஒரு மாதத்திற்கு தேக்க நிலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய புள்ளியியல் அலுவலகம் ( ONS), மே மாதத்திற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி ( GDP ) புள்ளிவிவரங்களை வியாழக்கிழமை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது l.
ஏப்ரல் மாதத்தின் 0.1 சதவிகித சரிவைத் தொடர்ந்து, மே மாதத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மாற்றமின்றி இருக்கும் அல்லது சரியும் என்று பொருளாதார வல்லுநர்கள் பரவலாக எதிர்பார்க்கின்றனர்.
இது, மார்ச் மாதத்தின் 0.3 சதவிகித வளர்ச்சி மற்றும் பெப்ரவரி மாதத்தின் 0.4 சதவிகித வளர்ச்சியிலிருந்து ஏற்பட்ட ஒரு கடுமையான பின்னடைவாகும்.
கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறைகளில் வளர்ச்சி இருந்தபோதிலும், சேவைத் துறையில் ஏற்பட்ட சரிவே ஏப்ரல் மாத வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
அதிகரித்து வரும் எரிபொருள் மற்றும் எரிசக்தி விலைகள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வணிகங்களையும் குடும்பங்களையும் நெருக்கடிக்கு உள்ளாக்கின.
இருப்பினும் சமீபத்தில் மொத்த விலைகள் தணிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சேவைகள் துறை மீண்டும் பலவீனமாகச் செயல்படும் என்றும், ஆனால் பரந்த பொருளாதாரம் கலவையான போக்கைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
அதிக எண்ணெய் விலைகளால் எரிசக்தி விநியோகம் போன்ற துணைத் துறைகள் ஊக்கமடையும் என்றும் கணிப்பதாக பாந்தியன் மேக்ரோ எகனாமிக்ஸ் தெரிவித்துள்ளது.




