ஜெர்மனி – பவேரியா மாநிலத்தில் தப்பிச் சென்ற பூமா – மக்களுக்கு எச்சரிக்கை
ஜெர்மனியின் பவேரியாவில் உள்ள மியூனிக் விமான நிலையத்திற்கு அருகில், பூமா ஒன்று தப்பியோடியதாக வெளியான தகவலை தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஹெலிகாப்டர்கள், வெப்ப ட்ரோன்கள் மற்றும் தரை ரோந்துப் படைகளை உள்ளடக்கிய ஒரு மிகப் பெரிய தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பூமா என சந்தேகிக்கப்படும் அந்த உயிரினம் கடந்த செவ்வாய்க்கிழமை வனவிலங்கு காப்பகத்தில் உள்ள கெமராவில் இறுதியாக பதிவானதாக கூறப்படுகிறது.
அதேநேரம் அருகிலுள்ள மிருகக்காட்சிசாலைகள், விலங்குகள் சரணாலயங்கள் அல்லது நடமாடும் சர்க்கஸ்களில் இருந்து பெரிய பூனைகள் காணாமல் போனதாக தற்போது எந்த தகவலும் இல்லை என்று எர்டிங் Erding மாவட்டத்தின் உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஓபர்டிங் மற்றும் எர்டிங்கின் சுற்றுப்புறப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், செல்லப்பிராணிகளை வீட்டிற்குள் வைத்திருக்குமாறும், குழந்தைகளை கவனிக்காமல் தனியாக விட வேண்டாம் என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் சந்தேகப்படும்படி ஏதேனும் தென்பட்டால் உடனடியாகத் தெரிவிக்குமாறும் காவல்துறையினரால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பூமாக்கள் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை மற்றும் 100 கிலோகிராம் வரை எடை கொண்டவை. அவை பொதுவாக மனித தொடர்பைத் தவிர்த்தாலும், அவற்றுடனான தொடர்புகள் மிகவும் ஆபத்தானவையாக மாறக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.




