ஆபிரகாம் லிங்கன் கப்பலில் பணியாற்றும் 08 மாலுமிகளில் தற்கொலைக்கு முயற்சி
ஈரானுக்கு எதிரான போருக்கு ஆதரவாக நீண்ட காலப் பணியில் ஈடுபட்டிருந்த ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ (USS Abraham Lincoln) கப்பலில் பணியாற்றிய வீரர்களில் 08 பேர் தற்கொலைக்கு முயன்றதாக கடற்படை அனுப்பிய கடிதம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘லிங்கன்’ கப்பலின் விமானப் பிரிவைச் சேர்ந்த ஒரு மாலுமி ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் கப்பலிலிருந்து கடலில் குதித்துள்ளார்.
பின்னர் அந்தக் கப்பலின் மீட்பு ஹெலிகாப்டர் மூலம் அவர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மற்றொரு மாலுமி மார்ச் மாதத்தில் கடலில் குதிக்க முயன்றார், ஆனால் சக மாலுமிகளால் அவர் தடுக்கப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான விபரங்கள் நியூயார்க் மாநிலத்தைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி செனட்டர் கிர்ஸ்டன் கில்லிபிராண்டிற்கு (Kirsten Gillibrand) வழங்கப்பட்டுள்ளன.
கடற்படை மாலுமிகளின் தற்கொலைக்கு முயன்ற இந்த சம்பவம் தொடர்பான விவரங்களை சி.என்.என் ஊடகம் முன்னதாகவே தெரிவித்திருந்தது.
சுமார் 5,000 மாலுமிகளைக் கொண்ட ‘லிங்கன்’ கப்பல் 300 நாட்களுக்கும் மேலாகக் கடலில் பயணித்துள்ளது; எந்தவொரு துறைமுகத்திலும் நிற்காமல் நீண்ட காலம் கடலில் இருந்ததற்கான கடற்படை சாதனையை இது சமீபத்தில் படைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




