சர்ச்சைக்குரிய சமூக ஊடகப் பதிவு – 21 வயது பல்கலைக்கழக மாணவரிடம் தொடர் விசாரணை
நிகவெரட்டியாவில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் வருகை தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமூக ஊடகங்களில் எழுதிய 21 வயதான பல்கலைக்கழக மாணவரிடம் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (13) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ, இந்த விடயத்தை வெளிப்படுத்தினார்.
குறித்த மாணவர் நிகவெரட்டியாவின் கொட்டவெஹெர பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர் என்று ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரின் கூற்றுப்படி, நிகவெரட்டிய “இரத்தக் குளமாக” மாறும் என்று அந்த மாணவர் அக்டோபர் 11 அன்று சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தப் பதிவில் இரத்தம் சிந்துதல் மற்றும் ‘கர்மா’ (வினைப்பயன்) குறித்த குறிப்புகளுடன், ஜனாதிபதி திஸாநாயக்க மற்றும் அவரது குருநாகல் வருகை சாத்தியம் குறித்த கருத்துகளும் இடம்பெற்றிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இத்தகைய சமூக ஊடகப் பதிவுகள் விசாரணைக்குரியவை என்று அமைச்சர் ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணையை மேற்கொண்டனர்.
பின்னர் அந்த மாணவர் நிகவெரட்டியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, 500,000 ரூபா பெறுமதியான பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமைச்சர் ஜயதிஸ்ஸ இன்றைய தினம் உறுதிப்படுத்தினார்.




