பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் தொடர்பில் தமிழ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானம்
பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்து அதற்கு மாற்றீடாக புதியதொரு சட்டத்தை இயற்றும் போது எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருந்தால் விரும்பியோ விரும்பாமலோ நடைமுறையில் உள்ள சட்டத்தை அமுல்படுத்தவே நேரிடும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
அத்துடன் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் குறித்து தமிழ் அரசியல் தலைமைகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வதாகவும், அதற்கு மாற்றீடாக மனித உரிமைகள் மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும் என்று மக்களுக்கு வாக்குறுதியளித்தோம். அதற்கமைவாகவே பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை தயாரித்துள்ளோம்.
அனைத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சியினர் தற்போது இந்த சட்டமூலத்தையும் கையில் எடுத்துள்ளார்கள்.
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் நீதித்துறை சுதந்திரம் இல்லாதொழியும், நீதிமன்றங்களை நிறைவேற்றுத்துறை ஆக்கிரமிக்கும் என்று குற்றஞ்சாட்டினார்கள்.
ஆனால் போலியான குற்றச்சாட்டுக்களுக்கு உயர்நீதிமன்றம் பதிலடி கொடுத்தது. 22ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ளது.
நீதித்துறைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. நீதிமன்றங்கள் சுயாதீனமாகவே செயற்படுகின்றன.
வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்துக்கு எதிராக பல போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.
நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்து அதற்கு மாற்றீடாக பிறிதொரு சட்டத்தை இயற்றுவதற்கு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்பட்டால் விரும்பியோ அல்லது விரும்பாமலோ நடைமுறை சட்டத்தையே ஏதேனும் காரணிகளுக்காக நடைமுறைப்படுத்த நேரிடும்” எனத் தெரிவித்தார்.




