டாடா குழுமம் திட்டமிட்டு சீரழிக்கப்படுகிறது; நீதியை நிலைநாட்டுவோம்
இந்தியாவின் முன்னணி வர்த்தகக் குழுமமான டாடா குழுமத்தில் நிலவும் நிர்வாகப் போட்டி தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “டாடா குழுமம் திட்டமிட்டு சீரழிக்கப்படுகிறது. ஆனால், எந்தவொரு வர்த்தகத் தலைவரும் இதுகுறித்துப் பேசத் துணியவில்லை” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தியாவில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பைத் என். சந்திரசேகரன் தொடர்ந்து வகிப்பது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு மத்தியில், ராகுல் காந்தி இன்று (28) தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“டாடா குழுமம் திட்டமிட்டு சீரழிக்கப்படுகிறது. எந்தவொரு வர்த்தகத் தலைவரும் ஒரு வார்த்தைகூடப் பேசத் துணியவில்லை. இன்னும் எவ்வளவு காலம் மௌனமாக இருக்கப்போகிறீர்கள்? அவர்கள் உங்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வரையிலா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் விமர்சித்துள்ள ராகுல் காந்தி, இந்திய வர்த்தகத் துறை அவர்களின் தனிப்பட்ட விளையாட்டுப் பொருள் அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.
“உங்களிடம் துணிச்சல் இல்லை. எங்களிடம் உள்ளது. இந்தக் குற்றங்களுக்கு எதிராக நீதியை நிலைநாட்டுவோம்” எனவும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
டாடா குழுமத்தில் நிர்வாகப் போட்டி
டாடா அறக்கட்டளைகளின் தலைவர் நோயல் டாடா, டாடா சன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக என். சந்திரசேகரனை மீண்டும் நியமிப்பதற்கு கடந்த செப்டெம்பர் 17ஆம் திகதி எடுக்கப்பட்ட தீர்மானத்தின் செல்லுபடியாகும் தன்மையைச் சவாலுக்கு உட்படுத்தியுள்ளார்.
சந்திரசேகரனின் தற்போதைய பதவிக்காலம் 2027ஆம் ஆண்டு பெப்ரவரியில் நிறைவடையவுள்ள நிலையில், அவருக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் வழங்குவதற்கான தீர்மானம் தொடர்பில் நோயல் டாடா ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளார்.
குறித்த நியமனம் கூட்ட நிகழ்ச்சி நிரலில் முறையாக இடம்பெறவில்லை உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், டாடா சன்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய சில வர்த்தக நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
டாடா சன்ஸ் மற்றும் டாடா அறக்கட்டளைகளுக்கு இடையிலான இந்த நிர்வாக முரண்பாடு கடந்த செப்டெம்பர் மாதம் முதல் தீவிரமடைந்துள்ளதுடன், தற்போது இந்திய அரசியல் தலைவர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.




