121 ஆண்டுகளுக்குப் பிறகு வினைல் இசைத்தட்டில் மீண்டும் ஒலிக்கிறது ‘வந்தே மாதரம்’
இந்தியாவின் தேசிய கீதமான வந்தே மாதரம் 121 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் வினைல் இசைத்தட்டு வடிவில் Vinyl Record) வெளியாகியுள்ளது.
பிரபல பின்னணிப் பாடகர் ஹரிஹரன், ‘தி ஆன்தம் – வந்தே மாதரம்’ என்ற சிறப்பு வினைல் இசைத்தட்டுப் பதிப்பை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் கையளித்துள்ளார்.
இந்த நிகழ்வு, இந்தியாவின் புதுடில்லியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையான ராஷ்டிரபதி பவனில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, ஹரிஹரனின் குடும்பத்தினர் நான்கு தலைமுறைகளாக இணைந்து ஜனாதிபதியைச் சந்தித்துள்ளனர்.
இசைத்தட்டுடன் அதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இசைத்தட்டு இயக்கும் கருவியையும் (Turntable) ஹரிஹரன் ஜனாதிபதியிடம் வழங்கியுள்ளார்.
இந்தச் சந்திப்பு தமது குடும்பத்துக்கு மறக்க முடியாத தருணம் எனக் குறிப்பிட்ட ஹரிஹரன், நாட்டுக்கு இசையைத் தமது பணிவான காணிக்கையாக வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதியின் அன்பான வரவேற்பையும் ஆசியையும் குடும்பத்தினருடன் பெற்றுக்கொண்டது தமது இசைப் பயணத்தை முழுமையடையச் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்திய இசைத்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ள ஹரிஹரன், தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார். இசைத்துறைக்கான அவரது பங்களிப்பைப் பாராட்டி, 2004ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் அவருக்கு பத்மஸ்ரீ விருதையும் வழங்கியிருந்தது.




