குழப்பத்தில் ட்ரம்ப்: பிரேசிலை இந்தியாவாக மாற்றி சர்ச்சை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பிரேசிலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை இந்தியாவின் ஜனாதிபதி தேர்தல் எனத் தவறாகக் குறிப்பிட்டதுடன், அமெரிக்காவின் வாக்குப்பதிவு முறையைக் விமர்சித்து பதிவிட்டுள்ளமை சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தனது ‘டிரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்ட டிரம்ப், “இந்தியாவின் ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில் இன்று 12.5 கோடி மக்கள் வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு முடிந்த சிறிது நேரத்திலேயே, அதே நாளில் முடிவுகளும் வெளியாகிவிட்டன!” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அமெரிக்க தேர்தல் முறையை விமர்சித்த அவர், “டெட்ராய்ட், பிலடெல்பியா, கலிபோர்னியா மற்றும் பல அமெரிக்க நகரங்கள் மற்றும் மாநிலங்களில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளைக் கணக்கிடவே பல வாரங்கள் ஆகின்றன. அமெரிக்காவில் வாக்குப்பதிவு முறை ஊழல் நிறைந்தது!” என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இருப்பினும், இந்தியாவில் ஜனாதிபதி தேர்தல் என்பது நேரடியாக மக்களால் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை; மாறாக எம்பி-க்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் அடங்கிய வாக்காளர் குழு (Electoral College) மூலமே மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
உண்மையில், பிரேசிலில் ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் சுமார் 12.52 கோடி செல்லுபடியாகும் வாக்குகள் பதிவாகின.
தற்போதைய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா மற்றும் வலதுசாரி வேட்பாளர் பிளாவியோ போல்சனாரோ ஆகியோருக்கு இடையே நடைபெற்ற இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையையே, டிரம்ப் இந்தியாவுடன் குழப்பிக் கொண்டு பதிவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தியாவில் மக்களால் நேரடியாக ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, சமூக வலைதளப் பயனர்கள் டிரம்பின் இந்தப் பதிவை விமர்சித்து வருகின்றனர்.




