விக்டோரியா தேர்தலில் லேபர் கட்சிக்கு தலையிடி: One Nation கட்சி ஏறுமுகம்!
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத் தேர்தலில் வலதுசாரி ஜனரஞ்சகக் கட்சியான ஒன் நேஷன் (One Nation) கட்சியின் செல்வாக்கு அதிகரித்து வருவது, அந்நாட்டின் அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி நடைபெறவுள்ள விக்டோரியா மாநிலத் தேர்தல், ஒன் நேஷன் கட்சியின் தலைவரான பொலின் ஹான்சனுக்கு முக்கிய அரசியல் சோதனையாக அமையவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் இரண்டாவது அதிக சனத்தொகையைக் கொண்ட மாநிலமான விக்டோரியாவில், கடந்த 12 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் தொழிற்கட்சியின் (Labor Party) ஆட்சி தொடருமா அல்லது லிபரல் – தேசியக் கூட்டணியிடம் ஆட்சி கைமாறுமா என்பதை இந்தத் தேர்தல் தீர்மானிக்கவுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய தேர்தலில் வெறும் 6 சதவீத வாக்குகளைப் பெற்ற ஒன் நேஷன் கட்சி, தற்போது பல கருத்துக்கணிப்புகளில் முன்னிலை அல்லது முன்னிலைக்கு நெருக்கமான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விக்டோரியா மாநில சட்டமன்றத்தின் கீழவையில் உள்ள 88 ஆசனங்களில், தற்போது ஒரு ஆசனத்தை மட்டுமே கொண்டுள்ள இக்கட்சி, இம்முறை 10 ஆசனங்கள் வரை கைப்பற்றக்கூடும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு வெற்றி பெற்றால், லிபரல் – தேசியக் கூட்டணி பெரும்பான்மையைப் பெறத் தவறும் பட்சத்தில், சட்டமியற்றும் நடவடிக்கைகளில் ஒன் நேஷன் கட்சி முக்கிய செல்வாக்குச் செலுத்தக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.
இதற்கிடையில், அவுஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, வீட்டு வாடகை மற்றும் வீடமைப்புப் பிரச்சினைகள், பணவீக்கம், ஊதிய வளர்ச்சியின்மை, வேலைவாய்ப்புப் பற்றாக்குறை மற்றும் வரிச்சுமை ஆகியவை வாக்காளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பாக, குடியேற்ற எதிர்ப்புக் கொள்கைகளை முன்னிறுத்தி வரும் ஒன் நேஷன் கட்சியின் வளர்ச்சிக்கு, பொருளாதார நெருக்கடிகளும் முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் விக்டோரியா மாநில அரசாங்கம் முன்னெடுத்த கொள்கைகளும், மெல்பேர்னில் அமுல்படுத்தப்பட்ட நீண்டகால முடக்கமும் தொழிற்கட்சியின் செல்வாக்கைப் பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்போது மாநிலத்தின் கடன் சுமை 60 சதவீதத்தால் அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
1997ஆம் ஆண்டு ஆசியக் குடியேற்றத்துக்கு எதிரான கொள்கைகளை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட ஒன் நேஷன் கட்சி, இதுவரை மாநில அல்லது மத்திய அரசாங்க மட்டத்தில் ஆட்சியமைத்ததில்லை.
எனினும், 2025ஆம் ஆண்டு மத்திய தேர்தலில் பழமைவாதக் கூட்டணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் சூழலைப் பயன்படுத்தி, இக்கட்சி தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், எதிர்வரும் 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய மத்திய தேர்தலிலும் பொலின் ஹான்சனின் ஒன் நேஷன் கட்சி, பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தலைமையிலான தொழிற்கட்சிக்கு சவாலாக உருவெடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


