இனப்படுகொலை தீர்ப்பு: இலங்கையிலுள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு என்ன நடக்கும்?
“சர்வதேச நீதிமன்றத்தின்(ICJ) தீர்ப்புக்கு அமைவாக மியன்மார்,ரோஹிங்கியா அகதிகள் அரசாங்கத்தினதும், சர்வதேசத்தினதும் பாதுகாப்பைப் பெறுவதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் .”- என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு, உல்லாசப் பயணத் துறை அமைச்சின் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவற்றைக் கூறினார்
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்,ஹக்கீம் எம்.பி அங்கு மேலும் தெரிவித்தவையாவன:
” மியன்மார் அரசாங்கத்தின் வன்முறையிலிருந்து தப்பி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக் கரைக்கு வந்த ரோஹிங்கியா இனத்தவர்களில் ஒரு பெரும் கூட்டத்தினர், இன்னும் முல்லைத்தீவு விமானப்படைத் தள வளாகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்குச் சர்வதேசப் பாதுகாப்பைப் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமல் உள்ளது; இவர்களின் மனித உரிமைகள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இப்போது எங்களுக்குத் தகவல்கள் கிடைக்கின்றன.
மியன்மார் நாட்டிற்கு இவர்களைத் திருப்பி அனுப்புவது தொடர்பாக மியன்மார் அரசாங்கத்துடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் குறித்து, வெளிவிவகார அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் பரிசீலிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில், திருப்பி அனுப்பப்படக் கூடாது என்ற நன்கு அறியப்பட்ட சர்வதேசக் கொள்கையான ‘நொன்-ரிஃபௌல்மென்ட்’ (non-refoulement) கோட்பாடு — சர்வதேச பாரம்பரியச் சட்டக் கோட்பாடு — தெளிவாக மீறப்படும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.
மியன்மார் ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக இனப்படுகொலையைச் செய்துள்ளதாகச் சர்வதேச நீதிமன்றம் இப்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, இனப்படுகொலைக்கும் வன்முறைக்கும் ஆளான ரோஹிங்கியா சமூகத்திற்கு, இனப்படுகொலைச் சாசனத்தின் (Genocide Convention) பங்காளிகளாக உள்ள அனைத்து நாடுகளும் — நாம் உட்பட — பாதுகாப்பு வழங்குவது அவற்றின் பொறுப்பாகும்.
இனப்படுகொலையைச் செயற்பூர்வமாகத் தடுப்பதற்கான தார்மீகக் கோட்பாடு இலங்கை அரசாங்கத்திற்கும் உண்டு என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.”- என்றார்.



