இந்தியா வசம் 190 அணு குண்டுகள்: ஆய்வறிக்கையில் தகவல்
நீண்ட தூர ஏவுகணைகளின் சேர்க்கையால் இந்தியாவின் தற்காப்புத் திறன் பெருமளவில் மேம்பட்டுள்ளதாகவும், இந்தியாவிடம் தற்போது சுமார் 190 அணுகுண்டுகள் இருக்கக்கூடும் என்றும் ‘புல்லடின் ஆப் தி அட்டாமிக் சயின்டிஸ்ட்ஸ்’ (Bulletin of the Atomic Scientists) அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
அணு ஆயுதங்களை வைத்திருப்பது மட்டுமே ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு போதுமானதல்ல; எதிரியின் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை அமைப்புகளும் அவசியமாகும்.
அந்த வகையில், இந்தியா சக்திவாய்ந்த அணுகுண்டுகள் மற்றும் ஹைட்ரஜன் குண்டுகளைக் கொண்டிருப்பதுடன், எதிரி நாடுகளின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வல்லமைமிக்க நீண்ட தூர ஏவுகணை அமைப்புகளையும் கைவசம் வைத்துள்ளது.
இந்தியா, “முதலில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தக் கூடாது” (No First Use) என்ற கொள்கையைத் தொடர்ந்து உறுதியுடன் பின்பற்றி வருகிறது.
அதேவேளையில், அணு ஆயுதங்களை ஏவும் தரை, வான் மற்றும் கடல் வழியிலான முழுமையான ‘நியூக்ளியர் ட்ரையாட்’ (Nuclear Triad) கட்டமைப்பைத் தொடர்ந்து நவீனப்படுத்தி இயக்கி வருகிறது.
அணு ஆயுதப் பாதுகாப்பில் மிகுந்த ரகசியம் காக்கும் இந்தியா, தன்னுடைய உத்திசார் ஆயுதங்களின் முழுமையான திறன், விரிவாக்கத் திட்டங்கள் மற்றும் அவற்றின் உண்மையான தாக்குதல் எல்லை குறித்த விபரங்களை ஒருபோதும் பகிரங்கமாக வெளியிடுவதில்லை.
எனவே, பொதுவெளியில் அறியப்படும் தரவுகள் இந்தியாவின் முழுமையான இராணுவத் திறனைக் குறிப்பவை அல்ல என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




