திருப்பரங்குன்றத்தில் தீபமேற்ற உச்சநீதிமன்றம் அனுமதி – பாதுகாப்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலைமீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருநாளன்று விளக்கேற்ற இந்திய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
குறித்த மலையில் தீபம் ஏற்ற கடந்த 2025 ஆம் ஆண்டு மதுரையில் உள்ள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இருப்பினும் அன்று குறித்த தீபம் ஏற்றப்படவில்லை. மாறாக மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
மேலும், தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தது.
இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் தீபம் ஏற்றுவதற்கு ஆதரவாக உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தது.
குறித்த வழக்கு இன்று அரவிந்த் குமார், விபுல்.எம்.பஞ்சோலி ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் வரும் 24ம் திகதி கார்த்திகை தினத்தன்று ஒருமுறை தீபமேற்ற உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மேலும் இந்த உத்தரவு இறுதியானது அல்ல எனவும், இடைக்கால தீர்ப்பாகவே இந்த உத்தரவை பிறப்பிப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
அதேநேரம் தீபத்தூணில் தீபம் ஏற்ற போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதுடன், தேவைப்பட்டால் மத்திய தொழிற்பாதுகாப்புப்படையினரையும் பாதுகாப்புக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதியளித்துள்ளது.




