இலங்கை செய்தி

சவால்களுக்கு மத்தியிலும் சுற்றுலாத்துறையில் புதிய மைல்கல்லை எட்டிய இலங்கை

\இலங்கை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 20 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளது. இந்த இலக்கை இன்று (20) எட்டியுள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

\இலங்கை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 20 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளது. இந்த இலக்கை இன்று (20) எட்டியுள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

20 இலட்சமாவது சுற்றுலாப் பயணியாக ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

நடாலியா, அவரது கணவர் செர்கெய் மற்றும் மகள் அன்னா ஆகியோர் இந்த மைல்கல்லுடன் தொடர்புடைய சுற்றுலாப் பயணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கை 6 ஆண்டுகளுக்குப் பின்னர், 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகையை எட்டியிருந்தது. 2025ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் திகதியே இந்த இலக்கை அடைந்திருந்த நிலையில், இவ்வாண்டு நவம்பர் 20ஆம் திகதி அதனை எட்டியுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய சுற்றுலா பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க, உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் இலங்கையின் சுற்றுலாத்துறை தொடர்ந்து மீட்சியடைந்து வருவதையும், அதன் உறுதித்தன்மையையும் இந்த சாதனை பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல்கள், சர்வதேச விமானப் பாதைகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகள், விமான எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றுக்கு மத்தியிலும் இந்த இலக்கை எட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

2025 நவம்பரில் ஏற்பட்ட டிட்வா அனர்த்தத்துக்குப் பின்னர் சுற்றுலாத்துறை எதிர்கொண்ட சவால்களையும் நினைவுகூர்ந்த அவர், இத்தகைய சூழலிலும் துறையின் வளர்ச்சி வேகம் தொடர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

நவம்பர் 10 முதல் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாளாந்த சராசரி சுற்றுலாப் பயணிகள் வருகை 7,480 ஆகப் பதிவாகியுள்ளது. இது 2025ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் பதிவான 7,130 வருகைகளுடன் ஒப்பிடுகையில் சுமார் 4.9 சதவீத அதிகரிப்பாகும்.

புதிய சர்வதேச விமான சேவைகள் அறிமுகம், நேரடி விமான இணைப்புகள் விரிவாக்கம், புதிய சுற்றுலா சந்தைகளில் நுழைதல் மற்றும் சர்வதேச விளம்பர நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் ஆகியவை இந்த வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், சுற்றுலாத்துறையின் ஊடாக நாட்டுக்குக் கிடைக்கும் பொருளாதார நன்மைகளையும் அதிகரிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, சர்வதேச தரங்களுக்கு ஏற்ப சுற்றுலா வருமானத்தை மதிப்பிடும் முறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. நாணய மாற்று விகிதங்கள், பொருளாதார நிலைமைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் செலவுப் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களும் இதன்போது கருத்தில் கொள்ளப்படுகின்றன.

2025ஆம் ஆண்டில் பதிவான மொத்த சுற்றுலாப் பயணிகள் வருகை எண்ணிக்கையை இந்த ஆண்டின் இறுதிக்குள் முறியடிப்பதே அரசாங்கத்தின் அடுத்த இலக்காகும் எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

விமான இணைப்புகளை விரிவுபடுத்துதல், சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், புதிய சந்தைகளை உருவாக்குதல் மற்றும் சுற்றுலா சேவைகளின் தரத்தை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் தனியார் துறை, விமான நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை