இலங்கை செய்தி

இலங்கையில் புதிய குடிவரவுச் சட்டமூலத்திற்கு அங்கீகாரம்

முதலாவது வாசிப்புக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குடிவரவுச் சட்டமூலத்திற்கு ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

முதலாவது வாசிப்புக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குடிவரவுச் சட்டமூலத்திற்கு ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

குறித்த சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்மானத்திற்கு அமைவாக, குழுநிலை விவாதத்தின்போது மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.

குறித்த துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக்க தலைமையில் கூடியதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

இக்குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் உள்ளிட்ட அத்திணைக்கள அதிகாரிகள், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்டவரைஞர் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

(351ஆம் அத்தியாயமான) குடிவருவோர் மற்றும் குடியல்வோர் சட்டத்தையும், 1971ஆம் ஆண்டின் 53ஆம் இலக்க கடவுச்சீட்டு (ஒழுங்குபடுத்தல்) மற்றும் வெளிச்செல்கை அனுமதிப் பத்திரச் சட்டத்தை நீகுவதற்கும், தற்போதைய சர்வதேச தரநிலைகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வகையில் இந்தப் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தச் சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து திருத்தங்களும் சட்டமூலத்தில் உள்ளடக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்பாக, உயிரியல் அடையாளத் தகவல்களை (Biometric Data) சேகரித்தல் மற்றும் சேமித்தல் ஆகிய நடவடிக்கைகளின்போது தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு (Personal Data Protection Act) இணங்க, சட்டரீதியான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அத்துடன், கட்டுப்பாட்டாளர், பிரதி கட்டுப்பாட்டாளர் மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர் போன்ற பழைய பதவிப் பெயர்களுக்குப் பதிலாக, கட்டுப்பாட்டாளர் நாயகம், மேலதிக கட்டுப்பாட்டாளர் நாயகம் மற்றும் குடிவரவு உத்தியோகத்தர்கள் எனப் பதவிப் பெயர்கள் இற்றைப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசிப்பதைத் தடுக்கும் நோக்கில், அவசியமான சந்தர்ப்பங்களில் அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதியினால் வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் அதிகாரம் வழங்கப்படும் முப்படையினர் மற்றும் கரையோரப் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் (Coast Guard) வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைச் செயற்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், இலங்கையிலிருந்து சட்டபூர்வமாக வெளியேறி, வேறொரு நாட்டில் போலியான கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் ஆட்கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் இலங்கைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்வதற்கும், அவ்வாறான ஒழுங்கமைக்கப்பட்ட சட்டவிரோதச் செயற்பாடுகள் தொடர்பான வழக்குகளை மேல் நீதிமன்றத்தில் விசாரணை செய்வதற்கும் புதிய சட்டமூலத்தின் மூலம் அதிகாரம் வழங்கப்படுகின்றது.

அத்துடன், வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளில் முத்திரையிட வேண்டிய அவசியமின்றிப் பயன்படுத்தக்கூடிய தானியங்கி மின்னணு நுழைவாயில்கள் (E-Gates) உள்ளிட்ட தொழில்நுட்பத் தேவைகளைச் செயற்படுத்துவதற்கான சட்டரீதியான கட்டமைப்பும் இதன் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலங்கையர்களைத் திருமணம் செய்துகொள்ளும் வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் விசா வழங்கும்போது காணப்படும் சட்டரீதியான நிலைமைகள் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை