வடக்கு முதலீட்டு வலயங்கள் குறித்து ஆராய்வு
வடக்கு மாகாணத்தில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள காங்கேசன்துறை, பரந்தன் மற்றும் மாங்குளம் ஆகிய மூன்று முதலீட்டு வலயங்களின் முன்னேற்றம், முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சவால்கள் மற்றும் முதலீடுகளை விரைவாக ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் துமிந்த ஹூலன்ஹமுவ தலைமையிலான குழுவினருக்கிடையில் இன்று (26.09.2026) சனிக்கிழமை ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.
வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் துமிந்த ஹூலன்ஹமுவ தலைமையிலான குழுவினர் நேற்று (25.09.2026) வெள்ளிக்கிழமை மாகாணத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று முதலீட்டுக்குப் பொருத்தமான இடங்கள் மற்றும் நிலைமைகளை நேரில் பார்வையிட்டனர். அதன் தொடர்ச்சியாக இன்று ஆளுநரைச் சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது, வடக்கு மாகாணத்தில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள மூன்று முதலீட்டு வலயங்களின் தற்போதைய நிலைமை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக, முதலீட்டு வலயங்களுக்காக அடையாளம் காணப்பட்ட காணிகளை இலங்கை முதலீட்டுச் சபையிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் நீண்ட காலம் எடுத்துவருவது தொடர்பில் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்த முதலீட்டுச் சபையின் தலைவர், காங்கேசன்துறை மற்றும் பரந்தன் பகுதிகளுக்கான காணிகளை விரைவில் முதலீட்டுச் சபையிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அங்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளை விரைவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
குறித்த பகுதிகளைத் தாம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளதாகவும், முதலீட்டாளர்களை வடக்கு மாகாணத்துக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, முதலீடுகளை ஈர்ப்பதுடன், அவற்றைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான திறமையான மனிதவளத்தை உறுதிப்படுத்துவதும் அவசியம் என முதலீட்டுச் சபையின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகத் துறையினருடன் தாம் மேற்கொண்ட கலந்துரையாடல்களில், பல்வேறு அரச திணைக்களங்களுடன் தொடர்புடைய நடைமுறைச் சிக்கல்கள் முதலீட்டாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்குத் தீர்வு காணும் வகையில், சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்களை மாதாந்தம் ஒரே இடத்தில் ஒன்றுகூட்டி, முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நேரடியாக ஆராய்ந்து தீர்வு காணும் பொறிமுறையொன்றை உருவாக்குவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அவர் ஆலோசனை தெரிவித்தார்.
இதன்போது, முதலீட்டாளர்களுக்காக ஒற்றைச் சாளர முறையை அறிமுகப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படும் இணையத் தளம் தொடர்பிலும், அதன் ஆரம்பகட்டச் செயற்பாடுகள் குறித்தும் ஆளுநர் விளக்கமளித்தார்.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் வவுனியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் எடுத்துரைத்தார்.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், இலங்கை முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் தலைமையிலான குழுவினர், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர், ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




