காங்கோவில் ராணுவ விமானம் விபத்து: 14 பேர் பலி
ஜனநாயகக் காங்கோ குடியரசில் (DR Congo) ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில், நாட்டின் மூத்த ராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து தென்மேற்கு மாகாணமான குவாங்கோவில் (Kwango) உள்ள கேங்கே (Kenge) பகுதியில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.
தென்மேற்கு நகரமான கிக்விட்டில் (Kikwit) இருந்து தலைநகர் கின்ஷாசா நோக்கிப் புறப்பட்ட இந்த விமானத்தில், பயணத்தின்போது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.
இதனையடுத்து, கேங்கே பகுதியில் விமானத்தை அவசரமாகத் தரையிறக்க விமானி முயன்றுள்ளார்.
எனினும், அங்கு ஓடுபாதை (Runway) இல்லாத காரணத்தால், கட்டுப்பாட்டை இழந்த விமானம் குடியிருப்புப் பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது என குவாங்கோ மாகாண துணை ஆளுநர் ரெமி சாகி போகிண்டா தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 14 பேரும் உயிரிழந்துவிட்டதாக காங்கோ ராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் எபோமி எக்கெங்கே உறுதிப்படுத்தியுள்ளார். இதில் 12 பேரின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளன.
விமானியின் உடல் விமான இடிபாடுகளுக்கு வெளியே இருந்து மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் இரு ஜெனரல்கள், பல ராணுவ வீரர்கள், அரசு தூதுக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அடங்குவர் என ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மேஜர் ஜெனரல் எக்கெங்கே அறிவித்துள்ளார்.




