ஆஷஸ் தொடரில் நடந்த அவமானம்: மௌனம் கலைத்தார் உஸ்மான் கவாஜா
2023 ஆம் ஆண்டு லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது, மேரில்போன் கிரிக்கெட் கழகத்தின் (MCC) உறுப்பினர் ஒருவரால் இனவாத ரீதியில் அவமதிக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் உஸ்மான் கவாஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதிதாக வெளியிடப்பட்ட தனது சுயசரிதை நூலில் இந்தச் சம்பவம் குறித்து அவர் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின்போது, இங்கிலாந்து வீரர் ஜொனி பேர்ஸ்டோவை ஆஸ்திரேலிய விக்கெட் காப்பாளர் அலெக்ஸ் கேரி சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழக்கச் செய்தார்.
இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையில் பதற்றம் ஏற்பட்டதுடன், உணவு இடைவேளைக்காக மைதானத்தை விட்டு வெளியேறிய ஆஸ்திரேலிய வீரர்கள், லோர்ட்ஸ் மைதானத்தின் உறுப்பினர்கள் பகுதியில் இருந்த பார்வையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதன் பின்னர், தகாத வார்த்தைகள் மற்றும் அவமதிக்கும் வகையிலான நடத்தையில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட MCC உறுப்பினர் ஒருவர் கழகத்திலிருந்து நீக்கப்பட்டதுடன், மேலும் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு நான்கரை ஆண்டுகளும், மற்றொருவருக்கு 30 மாதங்களும் இடைநீக்கம் விதிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தின்போது தன்னை நோக்கி மீண்டும் கூச்சலிட வேண்டாம் என ஒருவரிடம் கூறியதைத் தொடர்ந்து, மற்றொரு நபர் தன்னை இனவாத ரீதியில் அவமதித்ததாக கவாஜா தனது நூலில் தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் MCC உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதம் தங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்ட அவர், வழக்கமாக கிரிக்கெட் மீதான ஆர்வமும் நாகரிகமான நடத்தையும் கொண்டவர்களாக அறியப்பட்ட அந்த உறுப்பினர்கள், அன்றைய தினம் மதுபோதையில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி வீரர்களை அவமதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒருவர் தன்னை நோக்கி கூச்சலிட்டதுடன், காரி உமிழ்ந்து ஆவேசமாகக் கத்தியதாகவும், மற்றொரு உறுப்பினர் தானும் டேவிட் வோர்னரும் படிக்கட்டுகளில் ஏறிச் சென்றபோது தடுமாறி விழச் செய்யும் வகையில் காலை நீட்டியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதேவேளை, 2018ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரின் இறுதிப் போட்டியின்போது பந்தை சேதப்படுத்துவதற்காக மணர்தாளைப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் அவுஸ்திரேலிய அணியின் அனைத்து வீரர்களுக்கும் தெரிந்திருந்ததாகவும் தனது சுயசரிதை நூலில் கவாஜா குறிப்பிட்டுள்ளார்.
39 வயதான உஸ்மான் கவாஜா, கடந்த ஜனவரி மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார்.ஆஸ்திரேலிய அணிக்காக 88 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6,229 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.




