யாழ்ப்பாணத்திலும் மெட்ரோ பேருந்துச் சேவை
யாழ்ப்பாண மாவட்டத்திலும் மெட்ரோ நகர்ப்புற பேருந்துச் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, பொருத்தமான பேருந்து வழித்தடங்களை அடையாளம் காண்பதற்கும், தொழில்நுட்ப சாத்தியப்பாடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஆராய்வதற்குமான விசேட வீதி ஆய்வும் பரீட்சார்த்த ஓட்டமும் இன்று (10) முன்னெடுக்கப்பட்டன.
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் போக்குவரத்து பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன ஆகியோரின் தலைமையில் இந்த நடவடிக்கைகள் இடம்பெற்றன.
யாழ்ப்பாணத்திற்கான மெட்ரோ பேருந்துச் சேவையை 2027ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஆரம்பிப்பதை இலக்காகக் கொண்டு முன் ஆயத்தப் பணிகள் துரிதப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
தற்போது 122 பேருந்துகளுடன் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் ஏழு வழித்தடங்களில் இயங்கிவரும் இச்சேவை, அடுத்தகட்டமாக யாழ்ப்பாணம் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
புதிய பேருந்து நிறுத்தங்கள், வாகனத் தரிப்பிடங்கள், தாழ்தளப் பேருந்துகளுக்குப் பொருத்தமான வீதிகள் உள்ளிட்ட வசதிகள் தொடர்பிலும் இன்றைய ஆய்வின்போது கவனம் செலுத்தப்பட்டது.
2029ஆம் ஆண்டுக்குள் நாடளாவிய ரீதியில் நவீன பொதுப் போக்குவரத்து வலையமைப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ், 100 சதவீத அரசாங்க நிதி ஒதுக்கீட்டில் இச்சேவை விரிவுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




