சிகாகோவில் இந்து கோயில் மீது தாக்குதல் நடத்த திட்டம் – இளைஞர் கைது
சிகாகோவின் அரோரா பகுதியில் உள்ள ஒரு இந்து கோவிலைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகக் கூறப்படும் 19 வயது இளைஞர் ஒருவரை, அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாலடைன் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸான்ட்ரோஸ் பாபோராகிஸ் என அடையாளம் காணப்பட்ட குறித்த இளைஞர் உணவகம் ஒன்றில் பணிப்புரிந்து வந்துள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேக நபரிடமிருந்து பல துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள், வெள்ளை தேசியவாத தீவிரவாத இலக்கியங்கள் மற்றும் இந்திய வம்சாவளியினருக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் அறிக்கைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் நடத்தத் திட்டமிட்டிருந்த தாக்குதல் குறித்து மற்றொரு நபர் பொலிஸாருக்கு தகவல் அளித்திருந்தார்.
அக்டோபர் 11, ஞாயிற்றுக்கிழமை அன்று அரோரா பகுதியில் உள்ள ஒரு இந்து கோவிலைக் குறிவைத்து தாக்குதல் நடத்த அவர் திட்டமிட்டிருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதலை நடத்த அவர் முயன்றபோது, அவரது துப்பாக்கி பழுதடைந்ததால் இந்த பெரும் துப்பாக்கிச் சூடு சம்பவம் தடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.




