APL தொடரில் இருந்து விலகினார் இங்கிலாந்து வீரர் Ollie Pope
ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் (APL) T20 தொடருக்கான வீரர்களின் ஏலப் பட்டியலில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து அணி வீரர் ஒலி போப் (Ollie Pope) அறிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் போட்டிகளில் பங்கேற்க இங்கிலாந்து வீரர்கள் விருப்பம் தெரிவித்ததற்கு எழுந்த கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்தே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியின் கீழ் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நடத்தப்படும் விதத்தைக் கண்டித்து, ஆப்கானிஸ்தான் அணியுடன் இருதரப்புத் தொடர்களில் விளையாட இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை (ECB) மறுத்து வருகிறது.
இருப்பினும், APL தொடரில் பங்கேற்க இங்கிலாந்து வீரர்களுக்கு தடையின்மை சான்றிதழ் (NOC) வழங்க ECB திட்டமிட்டுள்ளதாக Cricinfo இணையதளம் இம்மாத தொடக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.
இங்கிலாந்து வீரர்கள் APLK தொடரில் பங்கேற்பதற்கான சான்றிதழ்களை வழங்குவதற்கு முன்னர் ஈசிபி “மிகவும் கவனமாகச் சிந்திக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ள அச்சபையின் தலைவர் Richard Thompson , ஐக்கிய இராச்சியத்தின் வணிகத் தடைச் சட்டங்கள் இதற்கு ஒரு தடையாக உள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
திங்கள்கிழமை காலை உரையாற்றிய ECB ஆடவர் கிரிக்கெட் நிர்வாக இயக்குநர் ரொப் கீ (Rob Key), APL தொடரில் விளையாடுவது குறித்து வீரர்கள் “சரியான தர்மநெறிச் சார்ந்த முடிவை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
எனினும், எதிர்வரும் அக்டோபர் 24ஆம் திகதி நடைபெறவுள்ள ஏலப் பட்டியலில் இருந்து விலக ஒலி போப் ஏற்கனவே தீர்மானித்துவிட்டதாகவும், ரொப் கீ பேசுவதற்கு முன்பாகவே அவர் இந்த முடிவை எடுத்துவிட்டதாகவும் தெரியவருகின்றது.
ஒலி போப்பைத் தவிர, வில் ஸ்மீட் (Will Smeed) மற்றும் டேவிட் வில்லி (David Willey) ஆகிய மேலும் இரு இங்கிலாந்து வீரர்களும் போட்டியில் இருந்து விலகியுள்ளனர்.




