தேர்தலுக்கு முன் ஈரான்மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்?
இஸ்ரேலில் ஒக்டோபர் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஈரான்மீது தாக்குதல் நடத்தும் எண்ணம் இல்லை என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
அதேபோல இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த முற்பட வேண்டாம் என ஈரானுக்கும் அதன் ஆதரவுப் படைகளுக்கும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தலுக்கு முன்னதாக இராணுவ மோதலை ஏற்படுத்த நெதன்யாகு முயல்வதாக அவரது அரசியல் எதிரிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இது குறித்து இஸ்ரேலிய ராணுவ வானொலியில் (Army Radio) கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், “அது நமக்கு உகந்தது அல்ல; அதில் நமக்கு நன்மையும் இல்லை” என்று கூறினார்.
“ஈரான் நம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தினாலும் கூட அதற்கும் என்னைத்தான் அவர்கள் குற்றம் சாட்டுவார்கள்,” என்று கூறிய நெதன்யாகு, இஸ்ரேல் தாக்கப்பட்டால் பலமாகப் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானுக்குத் தான் ஏற்கனவே விடுத்த எச்சரிக்கையை மீண்டும் நினைவுறுத்தினார்.
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, ஈரானும் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் மீது பதிலடித் தாக்குதல்களை நடத்தியதால் இரு தரப்பிற்கும் இடையே போர் மூண்டது. கடந்த ஜூன் மாதத்திற்குப் பிறகு இஸ்ரேலும் ஈரானும் நேரடியாக மோதிக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




