6G மற்றும் AI தொழில்நுட்பப் புரட்சிக்கு இந்தியா தயார்
டெல்லி யஷோபூமியில் (Yashobhoomi) நடைபெற்ற 10-வது ‘இந்திய மொபைல் காங்கிரஸ் 2026’ (India Mobile Congress – IMC 2026) மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (08) தொடக்கி வைத்தார்.
“எல்லையற்ற வளர்ச்சி” (Scale Without Boundaries) என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்று வரும் இம்மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்பத்தின் நன்மைகள் நாட்டின் அனைத்துத் தட்டுகளிலும் உள்ள மக்களையும் சென்றடைவதை டிஜிட்டல் இந்தியா திட்டம் உறுதிசெய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், அதிவேக 5G சேவையானது நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் வெற்றிகரமாக விரிவாக்கப்பட்டு, டிஜிட்டல் இடைவெளி பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னதாக இம்மாநாட்டின் ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்த மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இந்தியத் தொலைத்தொடர்புத் துறை அடைந்துள்ள அபார வளர்ச்சி உலகளவில் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது என்றும், 6G மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற அடுத்தகட்ட தொழில்நுட்பப் புரட்சிக்கு இந்தியா முழுமையாகத் தயாராகி வருகிறது என்றும் தெரிவித்தார்.
உலகளாவிய தொலைத்தொடர்பு அமைப்பின் (GSMA) முக்கியப் பிரதிநிதிகள் மற்றும் தொலைத்தொடர்புத் துறை தலைவர்கள் கலந்துகொண்டுள்ள இம்மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு (AI), 6G தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு (Cybersecurity) மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.
100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள், 500-க்கும் மேற்பட்ட சர்வதேசக் கூட்டாளிகள் மற்றும் 600-க்கும் மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்கள் (Startups) இதில் பங்கேற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.




