கச்சத்தீவு விவகாரம்: இந்திய உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறது இலங்கை
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடிப்பதை விர்க்கும் வகையில் தமிழக மீனவர்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பில் இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள அவதானிப்புகள் வரவேற்கத்தக்கவை என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீளப் பெற வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணையின்போதே, இந்திய உச்சநீதிமன்ற நீதியரசர் சஞ்சய் குமார் தலைமையிலான குழாம், தமிழக மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடிப்பதைத் தவிர்க்கும் வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக, கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் போது இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையாமல் இருப்பது தொடர்பில் தமிழக மீனவர்களுக்கு தெளிவான அறிவுறுத்தல்களும் விழிப்புணர்வும் வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளமை, இரு நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச கடல் எல்லையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றது.
மேலும், விசாரணையின்போது நீதியரசர் சஞ்சய் குமார், இலங்கைக்கு தான் சென்றிருந்தபோது அங்குள்ள மக்கள் கடற்கரை மற்றும் பொது இடங்களின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் காண்பித்த சமூகப் பொறுப்புணர்வைத் தாம் அவதானித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் மக்கள் பொது இடங்களில் குப்பைகளை வீசாமல் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் காட்டும் அக்கறை தமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்களின் இத்தகைய சமூகப் பொறுப்புணர்வும், கடல் சூழலைப் பாதுகாப்பதில் காணப்படும் அக்கறையும் கடல் வளங்களைப் பாதுகாப்பதற்கும் சாதகமான பங்களிப்பை வழங்கக்கூடும் எனவும் நீதியரசர் தனது அவதானிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பதைத் தவிர்க்குமாறு தமிழக மீனவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து வரவேற்கத்தக்கது.” -எனவும் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் கடல் வளங்களையும் கடல் சூழலையும் பாதுகாப்பது எமது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும். எமது கடற்பரப்பில் சட்டவிரோதமான மற்றும் அழிவை ஏற்படுத்தக்கூடிய மீன்பிடி நடவடிக்கைகளுக்கு நாம் தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றோம்.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் வெளிநாட்டு மீன்பிடிப் படகுகள், குறிப்பாக அடித்தளத்தை அழிக்கும் வகையிலான மீன்பிடி முறைகள், எமது வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கடல் வளங்களையும் பாதிக்கின்றன.
எனவே, சர்வதேச கடல் எல்லையை மதிப்பதும், ஒவ்வொரு நாட்டினதும் கடல் வளங்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாப்பதும் இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கு அவசியமானதாகும்.
கச்சத்தீவு தொடர்பான 1974ஆம் ஆண்டு இந்தியா – இலங்கை ஒப்பந்தமும், 1976ஆம் ஆண்டு கடல் எல்லை மற்றும் மீன்பிடி தொடர்பான ஏற்பாடுகளும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர புரிந்துணர்வின் அடிப்படையில் அமைந்துள்ளன. இந்த விடயத்தில் இலங்கையின் நிலைப்பாடு தெளிவானது.
அத்துடன், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதுடன் கடல் வளங்களையும் பாதுகாக்கும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் மற்றும் இராஜதந்திர வழிமுறைகள் மூலம் நீடித்த தீர்வுகளை நோக்கி முன்னேறுவது முக்கியமானது என அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கச்சத்தீவு தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையின்போது இந்திய உச்சநீதிமன்றம் 1974 மற்றும் 1976ஆம் ஆண்டு இந்தியா – இலங்கை ஒப்பந்தங்களின் சட்டப்பூர்வ செல்லுபடியாகும் தன்மை குறித்து இறுதி தீர்ப்பை வழங்கவில்லை. இந்த வழக்கின் மேலதிக விசாரணை 2027 பெப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.




