இளம் வயதில் காலமான சர்வதேச நடுவர்: ஜிம்பாவேயில் சோகம்
ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் பிரபல நடுவருமான சாரா தம்பனேவனா (Sarah Dambanevana) திங்கள்கிழமை ஹராரேவில் தனது 36 ஆவது வயதில் காலமானார்.
கடந்த மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவச் சிகிச்சையைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்ததாக ஜிம்பாப்வே கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 செப்டம்பர் 2 ஆம் திகதி தனது சர்வதேச நடுவர் பயணத்தைத் தொடங்கிய சாரா, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 2024 மகளிர் T20 உலகக்கோப்பை மற்றும் இந்தியா, இலங்கையில் நடைபெற்ற 2025 மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் நடுவராகப் பணியாற்றினார்.
இந்த உலகக் கோப்பையில் முழுவதுமாகப் பெண் நடுவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க குழுவில் அவரும் இடம்பெற்றிருந்தார்.
அதற்கு முன்னதாக, 2023 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் T20 உலகக்கோப்பையின் இந்தியா – இங்கிலாந்து மோதிய இறுதிப் போட்டியில் நடுவராகப் பணியாற்றி, உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நடுவராகச் செயல்பட்ட முதல் ஜிம்பாப்வே பெண்மணி என்ற வரலாற்றைப் படைத்தார்.
ஒட்டு மொத்தமாகத் தனது நடுவர் பயணத்தில், உள்நாட்டுப் போட்டிகள் மற்றும் உலகளாவிய இளையோர் தொடர்கள் தவிர்த்து, 42 மகளிர் T20, 11 மகளிர் ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 ஆண்கள் T20 போட்டிகள் உட்பட 63 சர்வதேச போட்டிகளில் நடுவராகக் கடமையாற்றியுள்ளார்.
2009 முதல் 2014 வரை ஜிம்பாப்வே தேசிய கிரிக்கெட் அணிக்காகப் பந்துவீச்சாளராக விளையாடிய சாரா தம்பனேவனா, 2011 உலகக்கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். பின்னர் 2022 ஆம் ஆண்டில் ஐசிசி (ICC) நடுவர்கள் மேம்பாட்டுக் குழுவில் இணைந்தார்.




