ஒலி அலைகளைப் பயன்படுத்தி காற்றிலும் நீரிலும் பயணிக்கும் ட்ரோன்கள் உருவாக்கம்
சுவிட்சர்லாந்தில் உள்ள விஞ்ஞானிகள் குழு ஒன்று, ஒலி அலைகளைப் பயன்படுத்தி காற்றிலும் நீரிலும் பயணிக்கக்கூடிய சிறிய ட்ரோன்களை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சிறிய விமானங்களுக்கு (cavities) எனப்படும் சிறப்பு உள்ளீடற்ற அமைப்புகளை வழங்குவதன் மூலம் இந்த வெற்றியை அடைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்தக் குழிகள் ஒலியை இயக்க ஆற்றலாக (உந்துவிசையாக) மாற்றும் திறன் கொண்டவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறிய விமானங்களின் “குழிகள்” வட்டமாகவோ அல்லது மணி வடிவத்திலோ வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஒலி அலைகள் அவற்றின் உள்ளே உள்ள காற்றை அதிர்வடையச் செய்யும்போது, நகரும் காற்று ஒரு கச்சிதமான நீரோட்டமாக வெளியே தள்ளப்படுகிறது.
இங்கு ஹெல்ம்ஹோல்ட்ஸ் ஒத்திசைவு எனப்படும் ஒரு பண்பு பயன்படுத்தப்படுகிறது.
ஹெல்ம்ஹோல்ட்ஸ் ஒத்திசைவு என்பது ஒரு குழியில் உள்ள காற்றின் அதிர்வு, ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் ஒலியையோ அல்லது விசையையோ உருவாக்கும் ஒரு நிகழ்வாகும்.
ஒரு எளிய உதாரணம் கூற வேண்டுமானால், ஒரு காலி பாட்டிலின் மேற்புறத்தில் கிடைமட்டமாக ஊதும்போது ஏற்படும் ஒலி அல்லது ஒரு பாட்டிலில் தண்ணீர் நிரப்பும்போது கேட்கும் ஒலியில் ஏற்படும் மாற்றம் ஆகியவை இந்த ஒத்திசைவுக்கு நல்ல எடுத்துக்காட்டுகள் ஆகும்.
ஆராய்ச்சியாளர்கள் சுமார் ஒரு சென்டிமீட்டர் நீளமுள்ள மாதிரிப் படகுகளையும் உருவாக்கியுள்ளனர். மேலும், ஒரு ஒலிபெருக்கியிலிருந்து வெளிப்படும் ஒலியின் அதிர்வெண்ணை மாற்றுவதன் மூலம், அவர்களால் இந்தப் படகுகளை வெவ்வேறு திசைகளில் செலுத்தவும் தடைகளைத் தவிர்க்கவும் முடிந்துள்ளது.
கூடுதலாக, சிறிய பறக்கும் ட்ரோன்களைக் கொண்டும் இதேபோன்ற சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மோட்டார்கள், பற்சக்கரங்கள் அல்லது காந்தக் கூறுகளுக்குப் பதிலாக உள்ளீடற்ற குழிகள் பயன்படுத்தப்படுவதால், இந்தக் கருவிகளை மிகவும் சிறியதாகவும் எடை குறைவாகவும் உருவாக்க முடியும்.
எதிர்காலத்தில், பல ஒலி உணர்திறன் கட்டமைப்புகளை ஒரு நெகிழ்வான கருவியில் வைக்க முடியும் என்றும், இது ஒலிக்கு ஏற்ப வடிவத்தை மாற்றக்கூடிய காற்றியக்க ரோபோக்களுக்கு வழிவகுக்கும் என்றும் சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
ஒலி அலைகளைப் பயன்படுத்தி பொருட்களை மிதக்கச் செய்வதற்கும் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.




