முத்தரப்பு சந்திப்பில் மோடிக்கு இடமில்லை: ராகுல் காந்தி சீற்றம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் பங்கேற்ற முத்தரப்பு சந்திப்பைச் சுட்டிக்காட்டி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் இந்தியப் பிரதமரும் அந்த உயர்மட்ட சந்திப்பில் அமர்ந்திருப்பார் எனத் தெரிவித்த ராகுல் காந்தி, “சமரசம் செய்யப்பட்ட பிரதமரால் ஒருபோதும் அந்த மேசையில் அமர முடியாது” என தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஷென்சென் நகரில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ட்ரம்ப், ஷி ஜின்பிங் மற்றும் புடின் ஆகியோரின் சந்திப்பில், ஐக்கிய நாடுகள் சபையில் சீர்திருத்தங்கள், எண்ணெய் விநியோகத்தை அதிகரித்தல் மற்றும் அணுவாயுத அபாயங்களைக் குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இணக்கம் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அண்மையில் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் பங்களிப்பு குறைந்து வருவதாகவும், உலகளாவிய பேச்சுவார்த்தைகளில் இந்தியா ஓரங்கட்டப்பட்ட நாடாக மாறியுள்ளதாகவும் விமர்சித்திருந்தார்.
இந்தக் கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ராகுல் காந்தி பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி குற்றஞ்சாட்டியுள்ளார்.




