மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா சென்ற பாகிஸ்தான் அமைச்சர்
பாகிஸ்தானின் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பு அமைச்சர் முசாதிக் மசூத் மாலிக், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) நாகரிக உரையாடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவின்டெல்லிக்கு சென்றுள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவுக்கு விஜயம் செய்யும் பாகிஸ்தான் அமைச்சரான அவர், இன்று (20) முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை டெல்லியில் நடைபெறும் முதலாவது எஸ்.சி.ஓ. நாகரிக உரையாடல் மன்றத்தின் அமர்வுகளில் பங்கேற்கவுள்ளார்.
அவர் டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தபோது, இந்தியாவிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பதில் பொறுப்பாளர் சாட் வாராய்ச் வரவேற்றார்.
இந்த மாநாட்டில் நாகரிகங்களுக்கு இடையிலான உரையாடலின் முக்கியத்துவம், கலாசாரப் புரிந்துணர்வு மற்றும் இராஜதந்திர ஒத்துழைப்பு தொடர்பில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டை முசாதிக் மசூத் மாலிக் எடுத்துரைக்கவுள்ளார்.
அத்துடன், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் பாகிஸ்தானின் ஆக்கபூர்வமான பங்களிப்பு மற்றும் அந்நாட்டின் பல்வகையான நாகரிக, கலாசார பாரம்பரியங்கள் குறித்தும் அவர் கருத்துகளை முன்வைக்கவுள்ளார்.
இந்தியாவின் முன்மொழிவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாடு, யூரேசிய பிராந்திய நாடுகளுக்கு இடையிலான கலாசாரப் பரிமாற்றம், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் மக்கள் தொடர்புகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.




