போர்ச்சுகலில் அடிப்படை சம்பளம் 970 யூரோவாக அதிகரிப்பு
போர்ச்சுகல் அரசாங்கம், 2027-ஆம் ஆண்டுமுதல் தனது அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது,
இதற்கமைய தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை €970 யூரோவாக உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசாங்கம், தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகளின் சங்கங்கள் என முத்தரப்பினருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 08 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்தப் புதிய குறைந்தபட்ச ஊதியம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
பல ஆண்டுகளாக எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த தேசிய குறைந்தபட்ச ஊதியம், 2015-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது. இதன்படி அடுத்த ஆண்டில் 50 யூரோவால் அதிகரிக்கப்படவுள்ளது.
சமூக உரையாடலுக்கான நிரந்தர ஆணையத்தின் (CPCS) கடந்த கூட்டத்தின் போது, பிரதிநிதித்துவம் பெற்ற இரு தொழிற்சங்கக் கூட்டமைப்புகளும் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்தின.
இதற்கமைய UGT 1,000 யூரோக்களாக அதிகரிக்க கோரியதுடன், CGTP 1,100 யூரோக்களாக அதிகரிக்க கோரியது.
இருப்பினும், தற்போதைய பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு, முதலாளிகள் கூட்டமைப்புகள் இந்த முன்மொழிவுகளை எதிர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




