சமூக வலைத்தள நட்சத்திரமான நீர்யானைக்கு நேர்ந்த துயரம்: தொப்பியை விழுங்கி உயிரிழப்பு
அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் உள்ள சின்சினாட்டி Cincinnati உயிரியல் பூங்காவில் சமூக வலைத்தளங்களில் பிரபலமான நீர்யானையான பியோனா (Fiona), பின்னப்பட்ட தொப்பியொன்றை விழுங்கியதால் ஏற்பட்ட மருத்துவச் சிக்கல்களையடுத்து உயிரிழந்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு குறைப்பிரசவத்தில் பிறந்து உயிர் பிழைத்த பியோனா, சமூக வலைத்தளங்களில் பெரும் புகழைப் பெற்றிருந்தது. இந்நிலையில், சுமார் 10 நாட்களுக்கு முன்னர் பார்வையாளர் ஒருவர் தவறுதலாக அதன் இருப்பிடத்துக்குள் வீசிய தொப்பியை பியோனா விழுங்கியுள்ளது.
தொப்பியை விழுங்கிய ஆரம்பத்தில் பியோனா இயல்பாக இருந்தபோதிலும், சில நாட்களுக்குப் பின்னர் அதன் உணவு உட்கொள்ளும் அளவு குறைந்துள்ளது. இதையடுத்து, தொப்பி செரிமானப் பாதை வழியாக வெளியேறுவதற்கு உதவும் வகையில் உயிரியல் பூங்கா மருத்துவக் குழுவினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில் தொப்பி பியோனாவின் சிறுகுடல் வழியாக நகர்ந்து கொண்டிருந்தமை தெரியவந்தது. முழு வளர்ச்சியடைந்த நீர்யானைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வது சாத்தியமற்றதாக இருந்ததால், தொப்பி இயற்கையாக வெளியேறுவதே சிறந்த வாய்ப்பாக கருதப்பட்டது.
இதற்காக, குதிரைப் பண்ணையிலிருந்து பெறப்பட்ட அதிர்வு ஏற்படுத்தும் மேடையிலும் பியோனா நிற்க வைக்கப்பட்டு சிகிச்சை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், கால்நடை மருத்துவர்கள் மற்றும் பராமரிப்புக் குழுவினரின் பல்வேறு முயற்சிகளும் பலனளிக்கவில்லை.
“எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம். ஆனால், அவளது உடலால் மேலும் போராட முடியவில்லை” என உயிரியல் பூங்கா நிர்வாகி டேவ் ஜெனிக்கே தெரிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டு குறைப்பிரசவத்தில் பிறந்த பியோனா, பிறக்கும்போது 13 கிலோகிராம் எடையுடன் இருந்தது. இது அந்நினத்தின் நீர்யானைகளில் பதிவான மிகக் குறைந்த பிறப்பு எடையை விடவும் சுமார் பாதியளவு குறைவானதாக இருந்ததாக உயிரியல் பூங்கா தெரிவித்துள்ளது.
பொதுவாக, பராமரிப்பில் உள்ள நீர்யானைகள் சுமார் 50 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை என்பதால், பியோனாவின் மரணம் மிகவும் முன்கூட்டிய இழப்பாகக் கருதப்படுகிறது.
இந்தச் சம்பவம் திட்டமிட்டு இடம்பெறவில்லை என்றாலும், விலங்குகளுடன் பார்வையாளர்கள் பொறுப்புடனும் கவனமாகவும் நடந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுவதாக விலங்கு உரிமைகள் அமைப்பான பெட்டா (PETA) தெரிவித்துள்ளது.




