கணவனை கொலை செய்த மனைவிக்கு மரண தண்டனை: கள்ள காதலனும் சிக்கினார்
கணவரைக் குத்திக் கொலை செய்து அவரது உடலை நீல நிற பிளாஸ்டிக் டிரம்மிள் சிமெண்ட் ஊற்றி மறைத்த கொடூர வழக்கில், மனைவி மற்றும் அவரது காதலனுக்கு மீரட் மாவட்ட நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த சவுரவ் ராஜ்புத் என்பவரின் மனைவி முஸ்கான் ரஸ்தோகி. முஸ்கானுக்கு சஹில் சுக்லா என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்துவந்துள்ளது.
இந்நிலையில், தங்களது காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் சவுரவை, முஸ்கானும் சஹிலும் இணைந்து கடந்த 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்தனர்.
கொலைக்குப் பின்னர், சவுரவின் உடலை ஒரு நீல நிற பிளாஸ்டிக் டிரம்மிள் போட்டு, அது வெளியில் தெரியாமல் இருக்கச் சிமெண்ட், கான்கிரீட் கலவை மற்றும் மணலைக் கொட்டி மூடினர்.
பின்னர் குற்றத்திற்குப் பயன்படுத்திய ஆயுதம் மற்றும் உடலிருந்த டிரம்மை மறைத்து வைத்துவிட்டு இருவரும் இமாச்சலப் பிரதேசத்திற்குத் தப்பியோடினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த மீரட் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி சஹில் மற்றும் முஸ்கானைக் கைது செய்தனர்.
நீண்ட விசாரணைக்குப் பிறகு, கணவரைக் கொலை செய்து ஆதாரங்களை மறைத்த வழக்கில் மனைவி முஸ்கான் மற்றும் அவரது காதலன் சஹில் ஆகியோர் குற்றவாளிகள் என மீரட் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தது. தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இவ்வழக்கின் தண்டனை விவரங்கள் இன்று வெளியிடப்பட்டன. கணவரைக் கொடூரமாகக் கொலை செய்து டிரம்மிள் மறைத்த குற்றத்திற்காக முஸ்கான் மற்றும் சஹில் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்து மீரட் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் மிஸ்ரா உத்தரவிட்டார்.
சம்பவம் நடந்து சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு இந்த இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பை வழங்கும்போது, “தண்டனை என்பது தர்மம்” என்று மகாபாரத வரிகளை மேற்கோள் காட்டி நீதிபதி தீர்ப்பை வாசித்தார். தண்டனை விவரம் வெளியானதும் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே கூடியிருந்த பொதுமக்கள் ‘பாரத் மாதா கி ஜெய்’ என முழக்கமிட்டனர்.




