ராகுல் காந்தி பதவி விலக வேண்டும்: பாஜக வலியுறுத்து
தேர்தல் செயல்முறைகளைக் கேள்விக்குட்படுத்துவதற்கு முன்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது நாடாளுமன்ற பதவியை முதலில் ராஜினாமா செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் சவால் விடுத்துள்ளார்.
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ராகுல் காந்தி எழுப்பி வரும் விமர்சனங்களை எதிர்கொள்ளும் வகையில், ராய்பரேலி தொகுதியில் அவர் பெற்ற வெற்றியைக் சுட்டிக்காட்டி பஸ்வான் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் மற்றும் சிறப்புத் திருத்த நடவடிக்கைகளைத் திரும்பப் பெற வலியுறுத்தி தலைமைத் தேர்தல் ஆணையர் குமாருக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்கள் டெல்லியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், காவல்துறை அதிகார வரம்புமீறலைக் கண்டிக்கும் அதேவேளையில், இத்தகைய மோதல்களை ஒரே கோணத்தில் மட்டுமே பார்க்கக் கூடாது என்றும், மாணவர் போராட்டங்களின் முகமூடியைக் கொண்டு சமூக விரோத சக்திகள் ஊடுருவி மோதல்களைத் தூண்டக்கூடும் என்றும் சிராக் பஸ்வான் எச்சரித்துள்ளார்.
“காவல்துறையின் வன்முறையை நான் ஒருபோதும் ஆதரிக்கவில்லை. மாணவர்களுக்கோ அல்லது வேறு யாருக்கோ எதிராக இத்தகைய பலப்பிரயோகம் செய்யப்படுவதை நான் ஒருபோதும் ஏற்க மாட்டேன்” என்று பஸ்வான் தெரிவித்தார்.
இருப்பினும், இந்தச் சம்பவம் எங்கு, எப்போது, எவ்வாறு நடந்தது என்ற சூழ்நிலையைப் புரிந்துகொள்வது அவசியம் என்று அவர் கூறினார். “சில சந்தர்ப்பங்களில் சமூக விரோதக் கூட்டங்கள் மாணவர்களைப் பாதுகாப்பாக முன்னிறுத்தி காவல்துறையுடன் மோதலில் ஈடுபடுகின்றன. காவல்துறையினரும் மனிதர்கள் தான், அவர்களுக்கும் குடும்பங்கள் உள்ளன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது” என்று அவர் குறிப்பிட்டார்.
போராட்டக்காரர்கள் அல்லது நிர்வாகம் தரப்பில் பதற்றத்தை அதிகரிக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது எனத் தெரிவித்த அவர், வன்முறைத் தூண்டுதல்களைக் காரணம் காட்டிப் பலப்பிரயோகம் செய்வதை நியாயப்படுத்த முடியாது என்றார்.
மேலும், ராகுல் காந்தி எதார்த்தமான விவகாரங்களை விடுத்து அரசியல் நோக்கில் தொடர்ந்து பேசி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ராய்பரேலியில் ராகுல் காந்தியும், வயநாட்டில் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வத்ராவும் இதே தேர்தல் முறையின் மூலமே வெற்றி பெற்றுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், தேர்தல் செயல்முறையையே கேள்விக்குட்படுத்தும் ராகுல் காந்தி முதலில் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனச் சவால் விடுத்தார்.




