இத்தாலியில் 6,300 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்
இத்தாலிய அரசாங்கம் பாதுகாப்பு எச்சரிக்கைகளைக் கையாள்வதற்கான புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தவுள்ளது.
இதன்படி, ஆபத்து இருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இருந்தால் ஒழிய, கட்டிடங்களை காலி செய்ய வேண்டிய அவசியமில்லை என்று அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது.
இத்தாலி முழுவதும் உள்ள சுமார் 6,300 பாடசாலைகளுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்த மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
ஐரோப்பா முழுவதும் பாடசாலைகள், பல்பொருள் அங்காடிகள், இரத்த வங்கிகள், விமானப் போக்குவரத்து அமைப்புகள் மற்றும் ஊடக நிறுவனங்களை இலக்காகக் கொண்டு சமீபகாலமாக நடத்தப்பட்டு வரும் போலி அச்சுறுத்தல்கள் மற்றும் சைபர் தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே இந்த மிரட்டல்கள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்தகைய சம்பவங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து விவாதிக்க, பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி எதிர்க்கட்சித் தலைவர்களைத் தனது அலுவலகத்திற்கு அழைத்துள்ளார்.
“உண்மையான ஆபத்து உள்ளது என்பதை உணர்த்தும் ஒரு பெருமளவிலான மின்னஞ்சல் வந்திருப்பதைத் தவிர, உறுதியான ஆதாரங்கள் இல்லாத நிலையில் கட்டிடங்களைக் காலி செய்யக்கூடாது,” என்று பிரதமரின் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.




