ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் இலங்கை வீரருக்கு 10 கோடி ரூபா பரிசு
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைக்கும் இலங்கை வீர, வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில், ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவருக்கு 100 மில்லியன் ரூ (10 கோடி ரூபா ) பரிசுத் தொகை வழங்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்மொழிந்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (12) 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, முக்கிய சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் இலங்கை வீரர்களுக்கு பின்வரும் பரிசுத் தொகைகளை வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
– ஒலிம்பிக் போட்டிகள் – 10 கோடி ரூபா
– உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் – 10 கோடி ரூபா
– பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் – 7.5 கோடி ரூபா
– ஆசிய விளையாட்டுப் போட்டிகள் – 5 கோடி ரூபா
– சார்க் விளையாட்டுப் போட்டிகள் – 1.5 கோடி ரூபா
இதேவேளை, குறித்த போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வெல்பவர்களுக்கும், ஏனைய சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைக்கும் வீரர்களுக்கும் இதற்கேற்ற வகையில் நிதி வெகுமதிகளை வழங்குவதற்கும் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
மேலும், 2027ஆம் ஆண்டில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறையின் அபிவிருத்திக்காக 8,500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யவும் முன்மொழியப்பட்டுள்ளது.




