சவூதி மீதான தாக்குதல் – ரியாத்துக்கு துணை நிற்கும் R4 குழு
ரியாத்தின் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் ஆதரவு பெற்ற ஏமன் ஹூதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களை துருக்கி, பாகிஸ்தான், எகிப்து மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் கண்டித்துள்ளன.
. மேலும், இது “எந்தவொரு சாக்குப்போக்கிலும் நியாயப்படுத்தவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒரு அபாயகரமான பதற்ற அதிகரிப்பு” என்றும் கூறியுள்ளன.
ரியாத் விமான நிலையம் மீது முன்னதாக நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததுடன், 30 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் புதிதாக மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதேநேரம் கிட்டத்தட்ட பன்னிரண்டு பேர் காயமடைந்ததாகவும் சவூதி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து R4 என்று அழைக்கப்படும் பிராந்திய சக்திகளின் குழு, சவூதி அரேபியாவுக்குத் தங்கள் ஒற்றுமையையும் ஆதரவையும் மீண்டும் உறுதிப்படுத்தியது.
தாக்குதல்களை முறியடிக்கவும், அச்சுறுத்தல்களைத் தடுக்கவும், அவை மீண்டும் நிகழாமல் தடுக்கவும் சவூதி அரேபியா எடுக்கும் அனைத்து “சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மற்றும் வழிமுறைகளுக்கும்” முழு ஆதரவையும் வழங்குவதாக கூறியுள்ளது.
மேலும், இந்தத் தாக்குதல்களை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் நிறுத்த வேண்டும் என்றும் அக்குழு கூறியுள்ளது.
இதேவேளை நேட்டோ உறுப்பு நாடான துருக்கியும், அணு ஆயுதம் ஏந்திய பாகிஸ்தானும் சவூதி அரேபியாவுடன் ஆகஸ்ட் மாதம் ஒரு கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்படி, ஒரு தரப்பின் மீதான தாக்குதல் என்பது அனைவர் மீதான தாக்குதலாகக் கருதப்படும்.
கடந்த வாரம், ஹூதி தாக்குதல்களுக்கு மத்தியில், சவூதி அரேபியாவில் தங்களின் கூட்டுப் பாதுகாப்பு உறுதிமொழிகளைச் செயல்படுத்தவும், படைகளையும் திறன்களையும் “விரைவாக நிலைநிறுத்துவதை” உறுதி செய்யவும் ஒப்புக்கொண்டதாக இரு நாடுகளும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




