தைவானுக்கான ஆயுத விற்பனை – அமெரிக்காவை எச்சரிக்கும் வடகொரியா
தைவானுக்கான ஆயுத விற்பனை மற்றும் இராணுவ ஆதரவு விவகாரத்தில் அமெரிக்காவை வட கொரியா விமர்சித்துள்ளதுடன், தைவான் நீரிணையில் பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் என்று வொஷிங்டனை எச்சரித்துள்ளது.
வடகொரியாவின் அரசு ஊடகமான கேசிஎன்ஏ (KCNA) இன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
வட கொரியாவின் சர்வதேச விவகார ஆய்வாளர் கிம் மியோங் சோல் Kim Myong Chol எழுதியதாகக் கூறப்படும் கேசிஎன்ஏ-வின் கட்டுரையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டுரையில் தைவான் கொள்கையின் மூலம் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அமெரிக்கா சீர்குலைப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, அமெரிக்கத் தயாரிப்பான F-16V போர் விமானங்கள் சமீபத்தில் தைவானுக்கு வந்ததை அக்குறிப்பு விமர்சித்ததுடன், சீனாவுடனான சாத்தியமான மோதலின் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்குமாறும் வொஷிங்டனை எச்சரித்தது.
தைவான் விவகாரத்தில் சீனாவுடன் மோதத் தயாராக இருக்கிறதா என்பதையும், அதன் விளைவுகளைச் சமாளிக்க முடியுமா என்பதையும் அமெரிக்கா “இரண்டு முறை யோசிக்க வேண்டும்” என்று அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




