அரேபிய மோதல் இஸ்ரேலுக்கே சாதகமாக அமையும்: ஈரான் கருத்து
அரேபிய தீபகற்பத்தில் ஏற்பட்டு வரும் அரசியல் மற்றும் பாதுகாப்பு மாற்றங்கள் குறித்து தெஹ்ரான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகே Esmaeil Baqaei தெரிவித்துள்ளார்.
மேலும், மோதலில் ஈடுபட்டுள்ள தரப்புகளுக்கு இடையே பேச்சுவார்த்தையை ஏற்படுத்தித் தர ஈரான் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அவர்,
“மோதல்கள் தொடர்ந்து தீவிரமடைவது இஸ்ரேலுக்கு மட்டுமே சாதகமாக அமையும் என நாங்கள் நம்புகிறோம். இரு முஸ்லிம் நாடுகளுக்கு இடையே மோதல்கள் தொடர்வதை நாங்கள் விரும்பவில்லை.
குறிப்பாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் ஏற்கனவே இந்தப் பிராந்தியம் பல்வேறு பதற்றங்களை எதிர்கொண்டு வரும் வேளையில் இது தவிர்க்கப்பட வேண்டும்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “யேமன் மக்கள் அழுத்தங்கள், தடைகள் மற்றும் முற்றுகைகள் ஏதுமின்றி கண்ணியத்துடன் வாழ உரிமை உண்டு என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
கடந்த 10 முதல் 12 ஆண்டுகளில் அவர்கள் சந்தித்த துன்பங்கள் இஸ்லாமியக் கோட்பாடுகளின் படியும் சர்வதேச சட்டத்தின் படியும் நியாயப்படுத்த முடியாதவை” என்றும் Esmaeil Baqaei குறிப்பிட்டார்.




