16 முன்னாள் அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டுள்ளனர் -பிரதி அமைச்சர்
அக்டோபர் 2024 மற்றும் அக்டோபர் 2026 ஆகிய காலப்பகுதியில் விசாரிக்கப்பட்ட லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான வழக்குகளில், 16 முன்னாள் அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக பொதுப் பாதுகாப்புத் துறைக்கான பிரதி அமைச்சர் சுனில் வதாகல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
இக்காலப்பகுதியில் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கையாளப்பட்ட வழக்குகளில் மூன்று முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள், ஒரு முன்னாள் முதலமைச்சர், முன்னாள் அமைச்சர்களின் நான்கு மனைவிகள், ஏழு பிள்ளைகள் மற்றும் ஆறு உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் ஆகியோரும் சம்பந்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
ஊழல் என்பது முன்னாள் அரசியல் பதவியில் இருந்தவர்களுடன் மட்டும் நின்றுவிடாமல், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கியவர்களுக்கும் பரவியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அரசியல்வாதிகளால் பணியமர்த்தப்பட்ட வாகன ஓட்டுநர்கள் கூட லஞ்சக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அரசு நிறுவனங்களின் சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக தற்போதைய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளே ஊழல் எதிர்ப்பு விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்குக் காரணம் என்று பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
லஞ்சம் மற்றும் ஊழல் விவகாரங்களைக் கையாள்வதில் நிறுவன ரீதியான சுதந்திரம் எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த முன்னேற்றங்கள் வெளிப்படுத்துவதாகவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.




