உக்ரைன், தென்கொரியாவுக் கிடையில் ‘ராஜதந்திரப் போர்’
உக்ரைனுக்கான தனது தூதுவரை திரும்பப் பெறவுள்ளதாக தென்கொரியா அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் ராஜதந்திர மோதலின் உச்சக்கட்டமாக இந்நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவிற்கு ஆதரவாக போரில் ஈடுபட்டபோது பிடிபட்ட இரு வடகொரிய வீரர்களை தென்கொரியாவிடம் ஒப்படைத்ததாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி கடந்த மாதம் அறிவித்ததிலிருந்தே இந்த மோதல் வெடித்தது.
இந்த ஒப்படைப்பு விவகாரத்தை இரகசியமாக வைப்பதாக உக்ரைன் செய்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக தென்கொரியா குற்றம் சாட்டுகிறது. ஆனால், அவ்வாறு எந்தவொரு இரகசியப் பாதுகாப்பு ஒப்பந்தமும் (Non-disclosure agreement) செய்யப்படவில்லை என்று ஜனாதிபதி
ஸெலென்ஸ்கியின் அலுவலகம் மறுத்துள்ளது.
ரஷ்யாவிற்கு ஆதரவாக போரிட்ட ஆயிரக்கணக்கான வடகொரிய வீரர்களில் இந்த இரு வீரர்களும் அடங்குவர். இவர்கள் இருவரும் தங்களை தென்கொரியாவிற்கு அனுப்ப வேண்டும் என்று ஊடகங்களிடம் முன்னதாகக் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இவ்விவகாரம் தொடர்பாக தென்கொரிய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் பார்க் யூன்-ஜூ, கடந்த செப்டம்பர் மாதம் உக்ரைன் துணை அமைச்சர் ஆண்ட்ரி வீஷ்கினிடம் தனது நாட்டின் பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார்.
மேலும், உக்ரைன் வெளியுறவு அமைச்சரிடம் இருந்து தமக்கு மன்னிப்புக் கடிதம் கிடைத்ததாகவும், ஆனால் அது தென்கொரியாவின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இல்லை என்றும் தென்கொரிய வெளியுறவு அமைச்சர் சோ ஹியூன் இந்த வாரத் தொடக்கத்தில் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இருப்பினும், உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா எந்தவொரு மன்னிப்பும் கேட்கவில்லை என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹெோர்ஹி திக்கி செய்தியாளர்கள் சந்திப்பில் தெளிவுபடுத்தியதாக உக்ரைனின் ‘லிகா’ செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையிலேயே தூதுவர் திருப்ப அழைக்கப்பட்டுள்ளார்.




