இஸ்ரேலின் அடுத்த பிரதமர் யார்?
இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் Isaac Herzogs, புதிய கூட்டணி அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என்பது குறித்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற பொதுத் தேர்தலின் அதிகாரப்பூர்வ முடிவுகளைப் பெற்ற அவர், எந்தவொரு தரப்பும் தெளிவான வெற்றியைப் பெறவில்லை என்று தெரிவித்தார்.
மீண்டும் ஒரு தேர்தலைத் தவிர்க்க வேண்டுமானால், “அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியாது” என்று கட்சித் தலைவர்களிடம் ஹெர்சாக் கூறியுள்ளார்.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு Benjamin Netanyahu தலைமையிலான அணியோ அல்லது அவரது போட்டியாளரான காடி ஐசென்கோட் Gadi Eisenkot தலைமையிலான அணியோ நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறவில்லை.
நெதன்யாகு தரப்பினர், அரபு இனத்தவர் தலைமையிலான கட்சிகள் தேர்தலில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள நிலையில், தேர்தல் முறைகேடுகள் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் தேர்தலில் வெளிநாட்டுத் தலையீடு இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ‘ஷின் பெட்’ (Shin Bet) பாதுகாப்பு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.
இருப்பினும், தேர்தல் முடிவுகளில் இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்று மத்திய தேர்தல் குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அக்டோபர் 27 அன்று நடைபெற்ற தேர்தலில், நெதன்யாகுவின் வலதுசாரி ‘லிகுட்’ (Likud) கட்சியும், அதன் தீவிர வலதுசாரி மற்றும் தீவிர யூத மதவாதக் கூட்டணிக் கட்சிகளும் இணைந்து, 120 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் (நெசெட்) 53 இடங்களைக் கைப்பற்றின.
ஐசென்கோட்டின் மத்தியவாதக் கட்சியும், அவருடன் இணைந்த பிற யூத எதிர்க்கட்சிகளும் 48 இடங்களைப் பெற்றன.
அரபு வாக்காளர்களின் வருகை அதிகரித்ததைத் தொடர்ந்து, ‘யுனைடெட் அரபு லிஸ்ட்’ (United Arab List) மற்றும் ‘ஜாயிண்ட் லிஸ்ட்’ (Joint List) ஆகிய அரபு கூட்டணிகள் மொத்தம் 19 இடங்களைக் கைப்பற்றின. இது முன்னெப்போதும் இல்லாத அளவாகும்.
இதன் மூலம், அவர்கள் அரசாங்கத்தை அமைப்பதில் முக்கிய சக்திகளாக (kingmakers) மாறியுள்ளனர்.
இருப்பினும், யூதக் கட்சிகளில் ஒன்று தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும், தேர்தலுக்கு முன்பே அரபு கட்சிகளுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்கப் போவதில்லை என்று உறுதியளித்திருந்தன.
இஸ்ரேல் அதிபரின் பதவி பெரும்பாலும் சடங்கு சார்ந்ததே என்றாலும், தேர்தலுக்குப் பிறகு அரசாங்கத்தை அமைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரை அழைக்கும் பொறுப்பு அவருக்கு உண்டு.
அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு அரசாங்கத்தை அமைக்க 28 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். தேவைப்பட்டால் கூடுதலாக 14 நாட்கள் நீட்டிக்கப்படலாம்.
கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கு அதிக வாய்ப்புள்ள நபர் யார் என்பதைத் தீர்மானிப்பதில் அதிபருக்கு முழு அதிகாரம் உண்டு.
அதிக இடங்களைப் பெற்ற கட்சியின் தலைவரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்டாயம் அவருக்கு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.




