இந்தியா உத்தரகாண்டில் ஆற்றுக்குள் பாய்ந்த கார்: நால்வர் பலி
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் வீழ்ந்ததில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில், கங்க்னானி தர்மகுண்ட் அருகே இன்று (05.11.2026) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
டப்ரானி பகுதியை நோக்கிச் செல்லும் வழியில், கங்க்னானி தர்மகுண்டிலிருந்து சுமார் 20 மீற்றர் தொலைவில் பயணித்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் வீழ்ந்து ஆற்றுக்குள் பாய்ந்துள்ளது.
ஏழு பேர் பயணிக்கக்கூடிய குறித்த வாகனத்தில் ஏழு பேர் இருந்ததாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தைத் தொடர்ந்து ஆற்றங்கரையிலிருந்து நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஏனையவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆற்றில் நீரின் வேகம் அதிகமாகக் காணப்படுவதால் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் நீர்மூழ்கி வீரர்களும் மீட்புக் குழுவினரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும் பொலிஸார், மாநில அனர்த்த மீட்புப் படையினர் (SDRF) மற்றும் அவசர மருத்துவ சேவையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் ஆர்யாவின் அறிவுறுத்தலின் பேரில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உயிரிழந்தவர்களின் அடையாளங்களைக் கண்டறியும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், விபத்துக்கான காரணம் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.




