அரசியல் இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலத்தின் உண்மையான நோக்கம் என்ன?

மக்களை அடக்கி ஆள்வதற்கோ - சர்வாதிகாரத்தை நோக்கி பயணிப்பதற்காகவோ நீதித்துறையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளவில்லை.

“மக்களை அடக்கி ஆள்வதற்கோ – சர்வாதிகாரத்தை நோக்கி பயணிப்பதற்காகவோ நீதித்துறையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளவில்லை. மாறாக வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.” – என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார திட்டவட்டமாக தெரிவித்தார்.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கிய உறுதி மொழியையே நாம் நிறைவேற்றிவருகின்றோம். வலுவிழந்த எதிரணிகள் எப்படிதான் கூச்சல் இட்டாலும், மக்களுக்கான எமது பயணம் தொடரும் எனவும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம், நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் என்பன தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நீதி அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“நீதித்துறையை மறுசீரமைப்பதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. இதன் ஓர் அங்கமாகவே அனைத்து நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதெல்லையை இரு வருடங்களுக்கு நீடிப்பதற்காக 22 ஆவது திருத்தச்சட்டமூலமும், நீதித்துறை திருத்தச்சட்டமூலமும் என்பன முன்வைக்கப்பட்டுள்ளன.

இது திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல. இந்த விடயம் பற்றி பலவருடங்களாக கலந்துரையாடப்பட்டுவந்தது. இவ்வாறு அனைத்து காரணிகளையும் கருத்திற்கொண்டே நாம் தீர்மானம் எடுத்தோம்.

வழக்குகள் துரிதப்படுத்தப்படுவதை சட்டத்தரணிகளும் விரும்புகின்றனர். ஆனால் அரசியல் காரணங்களுக்காக ஒரு சில சட்டத்தரணிகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர். உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை மட்டுமே நீடிக்கப்படுகின்றது எனவும் போலியான கருத்தை பரப்பினர். அது உண்மை அல்ல. அனைத்து நீதிபதிகளும் ஓய்வுபெறும் வயதெல்லை ஈராண்டுகளுக்கு நீடிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

வழக்குகளை துரிதப்படுத்துவது, ஊழல்வாதிகளுக்கு எதிராக சட்டத்தை துரிதப்படுத்துவது சர்வாதிகாரமா? நீதிபதிகள் விரும்பினால் முன்கூட்டியே ஓய்வுபெறலாம். அவர்களின் உரிமைகளை நாம் பறிக்கவில்லை என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

மாகாண மட்டத்தில் மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வுகளை நடத்தும் திட்டமும் உள்ளது. ஆனால் பெடரலை நோக்கி நகர்கின்றது என இது தொடர்பிலும் போலியான கருத்தை சமூகத்தில் விதைக்க முற்படுகின்றனர்.

வழக்குகளை துரிதப்படுத்தி மக்களுக்கு நீதி, நியாயத்தை வழங்குவதே எமது நோக்கம். ஒட்டுமொத்த நீதித்துறை மறுசீரமைப்பின் ஓர் அங்கம் இது.” – என்றார் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை