சவுதி, துருக்கி, பாகிஸ்தான் ராணுவத் தளபதிகளின் அவசர கூட்டம்
‘மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்’ (Mecca Joint Defence Agreement) கீழ் சவுதி அரேபியாவிற்கு ஆதரவு அளிப்பதற்கான வழிகள் குறித்து விவாதிக்க, தங்கள் நாடுகளின் ராணுவத் தளபதிகளின் அவசரக் கூட்டத்தைக் கூட்டத் திட்டமிட்டுள்ளதாக சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.
சவுதி வெளியுறவு அமைச்சர் , பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் மற்றும் துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கான் பிடான் ஆகியோருக்கு இடையே நியூயார்க்கில் வியாழக்கிழமை நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக சவுதி செய்தி நிறுவனம் (SPA) தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த ராணுவத் தளபதிகள் கூட்டம் எப்போது நடைபெறும் அல்லது எவ்வகையான ஆதரவுகள் பரிசீலிக்கப்படும் என்பது குறித்த விவரங்களை அந்த கூட்டறிக்கை குறிப்பிடவில்லை.
கூட்டுத் தடுப்பு ஆற்றலை வலுப்படுத்தவும், பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் கடந்த ஆகஸ்ட் 7-ஆம் திகதி ‘மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்டன.
இந்த மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல், அனைத்து நாடுகளின் மீதும் நடத்தப்பட்டத் தாக்குதலாகக் கருதப்படும் என்பது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நிபந்தனையாகும்.
அதன்பின்னர், இந்த ஒப்பந்தத்தின் கீழ் வழிமுறைகளை உருவாக்கும் பணிகளை இம்மூன்று நாடுகளும் தொடங்கியுள்ளன.
ஆகஸ்ட் 31 அன்று இஸ்தான்புல்லில் நடைபெற்ற ‘மூலோபாய அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைக்குழுவின்’ முதல் கூட்டத்தில், சவுதி அரேபியாவில் ஒரு செயலகத்தை அமைப்பதற்கும் ராணுவ ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கும் வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் ராணுவத் தளபதிகள் ஒப்புக்கொண்டனர்.
வியாழக்கிழமை நடைபெற்ற வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில், மெக்கா மீதும் சவுதி அரேபியாவின் பொதுமக்கள் மற்றும் பொருளாதார மையங்கள் மீதும் நடத்தப்பட்டத் தாக்குதல்களுக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஐ.நா சாசனத்தின் 51-வது பிரிவின் கீழ் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளச் சவுதி அரேபியாவிற்கு உள்ள உரிமையும் உறுதி செய்யப்பட்டது.
சவுதி அரேபியா மீது தொடரும் ஏவுகணைத் தாக்குதல்கள்
யேமனிலிருந்து சவுதி அரேபியாவை இலக்கு வைத்துப் புதிய அலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் சூழலிலேயே இந்த ராஜதந்திர நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.




